நித்தி இருப்பது நெசமா எங்கே? -இன்டர்போல் உதவியை நாட கோரிக்கை!

நாட்டில் பல நகரங்களில் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில்  ஈக்வடார் நாடு அருகே உள்ள தனித் தீவை வாங்கி அங்கே நித்யானந்தா குடியேறி இருப்பதாக  நம்ப வைத்து தினமும் வலைதளங்களில் லைவ் வீடியோ மூலம் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்கங்களை போதிக்கிறார் நித்தி. இஅதை அடுத்து தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, இன்டர்போல் உதவியை பெற சிபிஐக்கு கர்நாடக சிஐடி கோரிக்கை வைத்துள்ளது.

பாலியல் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய நித்யானந்தா மீதான வழக்கு கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும், எனவே வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடக  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக காவல்துறை மற்றும் மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட இருந்த நிலையில், வேறு வழக்குகளை விசாரித்ததில் நேரமாகிவிட்டதால், நீதிபதி விசாரணைக்கு எடுக்கவில்லை.

குளிர்கால விடுமுறைக்குப் பின் ஜனவரி 10 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, நித்தியானந்தா வழக்குகளை விசாரிக்க ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து தெரிவிப்பதற்காக புளுகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் கோரிக்கை வைக்குமாறு கர்நாடக சிஐடி போலீசார் டெல்லி சிபிஐயிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார் என்பதை கண்டறிய, புளுகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நித்யானந்தா நேற்று பேசி வெளியிட்ட ஒரு  வீடியோவில், “நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்கப் போகிறேன். என் மறைவுக்குப்பிறகு என்ன செய்ய வேண்டும் என உயிலில் தெளிவாக எழுதி வைத்திருக்கிறேன். நான் எப்போது உடம்பை விடுகிறேனோ, அப்போது உடல் பெங்களூரில் உள்ள ஆதீனத்தில், மதுரை ஆதீனத்தின் சன்னிதானங்கள் எந்த முறைப்படி சமாதி செய்யப்படுவார்களோ அந்த முறைப்படி எனக்கும் செய்யப்பட வேண்டும்.

மதுரை ஆதீனத்துக்கு நான் வருவேனோ, வரமாட்டேனோ… போவேனோ, போகமாட்டேனோ… என எனக்குத் தெரியாது. அது பரமசிவனுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் என்னுடைய உடல் இந்த முறைப்படிதான் ஜீவசமாதி செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்துள்ளேன். மக்கள் கொடுத்த, கொடுக்கப் போகின்ற எல்லாவிதமான நன்கொடை மற்றும் காணிக்கைகள் அனைத்தும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மூன்று குருபரம்பரைகளுக்கு மட்டுமே சொந்தம் என உயில் எழுதிவைத்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.