பப்ஜி விளையாட்டுக்கு தடை! தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையம் பரிந்துரை!!

இளைஞர்கள் மத்தியில்பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் இணைந்து எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இது தான் பப்ஜி விளையாட்டின் விதி.  ஐரிஸ் நாட்டின் ‘பிராடன் கிரீனி’ என்பவர் அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என இந்த கேமை சித்தரித்து உருவாக்கியுள்ளார்.

தென் கொரியாவைச் சேர்ந்த ‘Bluehole’ என்ற நிறுவனம் இதனை வடிவமைத்தது. தற்போது ஆண்ட் ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்கும் இந்த பப்ஜி வீடியோ கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. பப்ஜி விளையாட்டை விளையாடாதவர்களின் எண்ணிக்கை  குறைவு என்றேதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் 10 கோடி பேர் தினமும் விளையாடி வருகின்றனர். முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த கேம், கடந்த மார்ச் மாதம்தான் இந்தியாவில் அறிமுகமானது.

அறிமுகமாகிய சில மாதங்களில் நம்மவூர் இளைஞர்களில் பெரும்பாலானோர்  இதற்கு அடிமை யாகி விட்டனர். இப்படி வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடி வந்த பப்ஜி  இனி பணம் சம்பாதிக்கவும் தற்போது வழி வகுத்து விட்டது. ஆம், War90.com என்ற இணையதளம் PUBG விளையாடுபவர்களுக்காக ஒரு போட்டி ஒன்றை நடத்தி வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு இந்த போட்டி நடத்தப்படும். இந்த போட்டியினுள் நுழைய நுழைவு கட்டணமாக வெறும் 30 ரூபாய் கட்டினால் போதும். இப்போட்டியில் முதல் இடத்தை பெறுவோருக்கு 400 ரூபாய் பரிசும் இரண்டாவது இடத்தை பிடிப்போருக்கு 200 ரூபாய் பரிசும் அளிக்கபடுகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பங்குபெறும்  ஓவ்வொரு நபருக்கும் பரிசுகள் வழங்கபடுகிறது. ஆட்டத்தின் முடிவு  வரை  நீங்கள் நிலைத்து ஆடினால் உங்களுக்கு ரூ . 2000 வரை பரிசாக கிடைக்கும்.

இதையடுத்துதான் இவ் விளையாட்டுக்கு வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று செய்திகள் வரத் தொடங்கின. அதனையடுத்து, பல்வேறு கல்வி நிலையங்களில் பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் உறுதிப் படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசு சுற்றறிக்கைவிட்டுள்ளது. குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையத்தின், பரிந்துரையின் பேரில் பப்ஜி விளையாட்டைத் தடைசெய்யவேண்டும் என்று மாநில தொடக்கக் கல்வித்துறை என்று அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், ’பப்ஜி விளையாட்டுத் தடை செய்யப்பட்டிருப்பதை மாவட்ட தொடக்கக் கல்வித்துறை உறுதிபடுத்தவேண்டும். பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் அடிமையாகியுள்ளதால், இந்தத் தடை அவசியமாகிறது. இந்த விளையாட்டு மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்த குஜராத் குழந்தைகள் நல அமைப்புத் தலைவர் ஜக்ருதி பாண்டியா, ‘பப்ஜி விளையாட்டை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையம் பரிந்துரைத்துள்ளது.எல்லா மாநிலங்களுக்கும் இதுகுறித்து கடிதம் அனுப்பி உள்ளது. எல்லா மாநிலங்களும் இதனைப் பின்பற்றவேண்டும். இந்த விளையாட்டின் எதிர்மறை விளைவுகளைப் பார்த்தப் பிறகு, இந்த விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.