ஜி.எஸ்.டி. வரி – 173 பொருட்களுக்கு குறைக்க கவுன்சில் முடிவு!
போன ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் படி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசரகதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வந்தன. இதனையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்தி ருந்தார். இந்நிலையில் கவுகாத்தியில் GST கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் 173 பொருட்களுக்கான GST வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 28 சதவீத வரி விதிப்பிலிருந்து 150 பொருட்கள் குறைந்த வரி விதிப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பொருட்களுக்கு மட்டும் இனி 28 சதவீத GST வரி விதிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவுகாத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 சதவீதம் GST விதிக்கப்பட்ட 228 பொருட்களின் மீதான வரி மறுசீராய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் திரைப்படம் தொடர்பான சாதனங்களுக்கான வரியை 18 சதவீதமாக குறைக்க GST கவுன்சில் பரிந்துரைத்தது. ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் தொடர்பான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. நகைத் தொழில், அச்சு தொழில், உணவு பொருட்கள் தொடர்பான வேலை மற்றும் சேவைகள் மீதான வரியையும் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
18 சதவீதம் வரை வரி உள்ள 58 பொருட்களுக்கு 5 சதவீதமாக வரியை குறைக்க பரிந்துரைக்கப்பட்டு uள்ளது. டிராக்டருக்கான வரி 28 சதவீதத்திலிருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விளைபொருள் கிடங்கு ஒப்பந்த பணிக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அழகு சாதன பொருட்களுக்கான வரி, கிரானைட் மார்பிள் வரி உள்ளிட்டவை 28-லிருந்து 18 சதவீதமாக்கப்பட்டுள்ளது. சாக்லெட், சுவிங்கம், ஷேவிங் கிரீம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியையும் குறைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் கூட்டம் முடிந்த பின்னர் பீஹார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மீடியாக்களிடம் “’பல்வேறு பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்ற அமைச்சரவை குழுவின் பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொண்டது. 227 பொருட்கள் தற்போது 28% வரி விதிப்பின் கீழ் வருகின்றன. இதில் 62 பொருட்களை மட்டுமே இருக்க வேண்டும் என அமைச்சரவைக் குழு பரிந்துரைத்தது.
ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் இந்த எண்ணிக்கையை மேலும் குறைந்துள்ளது. தற்போது, 28 சதவீத வரையறைக்குள் 50 பொருட்கள் மட்டுமே வருகின்றன. ஷேவிங் கிரீம், ஷேவிங் லோஷன், பற்பசை, ஷாம்பூ, அழகுசாதனப் பொருட்கள், பெண்களுக்கான முக அழகு கிரீம், சுவிங்கம், சாக்லெட், உள்ளிட்ட பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
டிராக்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள், திரைப்படம் தயாரிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றிக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விளைபொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கான வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
எனினும் வாஷிங்மெஷின், ஏசி எனப்படும் குளிர்சாதனப்பெட்டி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்டவற்றிக்கு தற்போதுள்ள 28 சதவீத வரி தொடரும்” எனக் கூறினார்.