October 17, 2021

4 விதமான வரிகள் – ஜி எஸ் டி கூட்டத்தில் முடிவு

இந்திய அரசியல் சட்டத்தின் 101-வது சட்ட திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும், 17 மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிய பின்பு குடியரசுத் தலைவர் அதற்கு இசைவு தந்துள்ளார். இதன் மூலம் ஜி.எஸ்.டி. என்ற புதிய வரியை விதிக்கும் அதிகாரத்தை மத்திய, மாநில அரசுகள் பெறுகின்றன. ஜி.எஸ்.டி. இந்திய பொருளாதாரத்தில் கவனிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்றாலும், இந்திய கூட்டாட்சி அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.

gst oct 19

1991-ம் ஆண்டிற்குப் பிறகு வந்த பொருளாதார சீர்திருத்தம், பொருளாதார நிர்வாகத்தில் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு வரி விலக்கும், கட்டமைப்பு வசதிகளையும் அளித்து எல்லாத்துறைகளிலும் தனியார் முதலீடுகளை ஈர்க்கின்றன. நாடு முழுவதிலும் பொருட்களின் மீதான வரி ஒரே மாதிரியாக இருப்பது அவசியம் என்பதினால் ஜி.எஸ்.டி. வரி விதிக்க எல்லா மாநிலங்களும் ஒப்புகொண்டன. ஆனால், ஜி.எஸ்.டி வந்ததினால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழப்பதுடன், கணிசமாக வரி வருவாயையும் இழக்க நேரிடும் என்று அ.தி.மு.க. வெளிப்படையாக தெரிவித்தது. ஜி.எஸ்.டி. செயல்படுத்தும் முறை மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள அரசியல் உறவையும் அவ்வப்போது சோதித்து பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பதால் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.

அரசியல் சட்ட நிறுவனமாக இருக்கும் ஜி.எஸ்.டி குழு ஒரு நிரந்தர அமைப்பாகும். இதில் மத்திய நிதி அமைச்சர் தலைவராகவும், மத்திய துணை நிதி அமைச்சர், 29 மாநில நிதி/வர்த்தக வரி அமைச்சர்கள், 2 யூனியன் பிரதேச நிதி/வர்த்தக வரி அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர். மொத்தம் 33 உறுப்பினர்களை கொண்ட இந்த ஜி.எஸ்.டி குழு பரிந்துரைக்கும் வரி விகிதங்கள், வரி வசூலிக்கும் முறைகள் எல்லாவற்றையும் மத்திய, மாநில அரசுகள் தங்கள் மக்கள் மன்றங்களில் சட்டங்களாக நிறைவேற்றி செயல்படுத்தவேண்டும்.

ஜி.எஸ்.டி குழுவின் பரிந்துரைக்கு மாறாகவோ, அல்லது ஜி.எஸ்.டி குழுவால் பரிந்துரைக்காத எதையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அல்லது மாநில அரசுகளுக்கு இடையே பிரச்சினைகள் வந்தாலும், ஜி.எஸ்.டி குழு தீர்வு காணவேண்டும். இதை கவனத்தில் கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் 3 நாள் கூட்டம் டெல்லியில் செவ்வாய் அன்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ஆண்டுக்கு 14% வளர்ச்சி என்ற விகிதத்தில் மாநிலங்களில் வருவாயை கணக்கிடப்படும் என அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வருவாய் பெறும் மாநிலங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று அருண் ஜெட்லி உறுதியளித்தார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் 4 விதமான வரிகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கு வரி விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டது. ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்கள், சொகுசு கார்களுக்கு 26% வரி விதிக்கப்படும். மற்ற பொருட்களுக்கு 6, 12, 18 ஆகிய விகிதங்களில் வரி விதிப்பு இருக்கும். தங்கத்திற்கு 4% வரி விதிக்கப்படும்.