September 17, 2021

கிரிகோர் மெண்டல்!- கொஞ்சம் டீடெய்ல்!

1822 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி ஆஸ்திரியாவில் Heinzendorf என்ற ஊரில் பிறந்தார் கிரிகோர் ஜோஹைன் மெண்டல். குடும்பம் மிக ஏழ்மையானது எனவே அவரை பள்ளிக்கு அனுப்பக்கூட பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதித்து அதை கொண்டு படித்தார் மெண்டல். பள்ளியில் நன்றாக படித்த அவர் தனது 21 ஆவது வயதில் மேல்படிப்புக்காக புனித தாமஸ் மடாலயத்தில் சேர்ந்தார். அங்கு நான்கு ஆண்டுகள் படித்து பாதிரியாரானார் மெண்டல். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பெற்று சான்றிதழ்க்காகத் தேர்வு எழுதினார். உயிரியல், புவியியல் ஆகியப் பாடங்களில் குறைவான மதிப்பென்கள் பெற்று அந்த தேர்வில் தோல்வியுற்றார். இருப்பினும் மடாலயத்தின் உயர் அதிகாரி அவரை வியன்னா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்தார். அங்கு உயிரியலும், கணிதமும் கற்ற பிறகு 1854 ஆம் ஆண்டு முதல் பிரண்ட் என்ற பள்ளியில் இயற்கை அறிவியல் ஆசிரியராகப் பணி புரியத் தொடங்கினார்.

mental jy 21

இயற்கையை அதிகம் நேசித்தார் மெண்டல் குறிப்பாக செடி கொடிகளை அதிகம் விரும்பினார். ஏன் ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்ற கேள்வி அவரை ஆராய்ட்சிகள் செய்யத் தூண்டியது. இருவேறு வண்ணங்களை கலந்தால் இன்னொரு வண்ணம் கிடைப்பதுபோல வெள்ளை மலர்த் தாவரத்தையும், சிவப்பு மலர்த் தாவரத்தையும் இனச்சேர்க்கை செய்தால் அடுத்த தலைமுறைச் செடிகள் ஃபிங்க் வண்ணமாக இருக்கும் என்று பலஎ நம்பி வந்தனர். அதனை நம்ப மறுத்த மெண்டல் ஆராய்ட்சியில் ஈடுபட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அந்த மனிதனின் உழைப்பைக் கேட்டால் வியந்து போவீர்கள்.

தன் ஆய்வுக்காக Pea Plants எனப்படும் பட்டாணிச்செடிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டு பல்வேறு விதமான சோதனைகளைச் செய்தார் மெண்டல். உதாரணத்திற்கு குட்டையான செடியையும், உயரமானச் செடியையும் இனக்கலப்பு செய்து வளர்த்தார். வெவ்வேறு வண்ண மலர்கள் கொண்ட செடிகளை இனக்கலப்பு செய்து பார்த்தார். அவ்வாறு தான் செய்த ஒவ்வொரு இனக்கலப்பையும் கவணமாக குறிப்பெடுத்து ஆண்டுக் கணக்கில் ஆராய்ந்தார். ஒவ்வொரு செடியின் உயரம், இலைகளின் தோற்றம், பூக்களின் நிறம், விதைகளின் வீரியம், செடிகளின் ஆரோக்கியம் இப்படி மிக நுணுக்கமான விபரங்களை அனுக்கமாக கவணித்துப் பொறுமையாகவும் சோர்ந்து போகமாலும், புள்ளி விபரங்களாகச் சேகரித்தார். சுமார் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அவர் வளர்த்து பரிசோதித்த செடிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 28000 செடிகள். அத்தனைச் செடிகளையும் ஆராய்ந்த மெண்டல் செடிகளின் உயரம், நிறம், ஆரோக்கியம் போன்ற குணங்களை ஏதோ ஒன்று தீர்மானிக்கிறது என முடிவுக்கு வந்தார்.

அந்த ஏதோ ஒன்றுதான் மரபனு என்ற ஜீன்ஸ் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அப்போது மெண்டல் அதனை கேரக்டர்ஸ் என்று அழைத்தார். அந்த ஆய்வுகளின் மூலம் அவர் கண்டுபிடித்ததுதான் ஹெரிடிட்டி எனப்படும் மரபுவழி விதிகள். 1865 ஆம் ஆண்டு தனது ஆராய்ட்சிகளை விளக்கி பிரண்ட் இயற்கை வரலாற்றுக் கழகத்திடம் சமர்பித்தார். Experiments with Plant Hybrids என்ற தலைப்பில் அவரது கட்டுரை பிரசுரமானது. மூன்று ஆண்டுகள் கழித்து மற்றொரு கட்டுரையையும் எழுதிச் சமர்பித்தார்.உயிரினங்கள் அனைத்திலும் மரபுத் தொடர்ச்சி இருப்பதற்கு மரபுக்கூறுகள்தான் காரணம் என்று பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு அந்த மரபுக்கூறுகள் செல்கின்றன என்றும், மரபுக்கூறுகள் இணையாகச் செயல்படுகின்றன என்றும் இரண்டு மரபுக்கூறுகள் ஒரு பண்பை நிர்ணயிக்கின்றன என்றும், எந்த மரபுக்கூறு வீரியமாக இருக்கிறதோ அந்த மரபுக்கூறு அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது என்றும் வீரியம் குறைந்த மரபுக்கூறு அடுத்தடுத்த தலைமுறைகளில் வெளிப்ப்டலாம் என்றும் மெண்டல் அந்தக் கட்டுரைகளில் விளக்கியிருந்தார்.

அந்த உண்மைகள்தான் தற்போதைய ஜினெடிக்ஸ் எனப்படும் மரபுவழி பண்பியலுக்கு அடிப்படையாக விளங்குகின்றன. இருபதெட்டாயிரம் செடிகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் அந்த முடிவுகளில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தார் மெண்டல். ஆனால் அந்தக் காலத்தின் சிறந்த நிபுனர்களால்கூட அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. மெண்டலின் தத்துவம் சமகால விஞ்ஞானிகளின் சிந்தனையைவிட வெகுதூரம் முன்னேறியிருந்தது. ‘காலத்தை முந்திய கவிஞன்’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மெண்டலோ காலத்தை விஞ்சிய விஞ்ஞானியாக இருந்தார். அதனால் அவரது கட்டுரைகளும் முடிவுகளும் கிட்டதட்ட மறக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டன. அந்த சமயம் மடாலயத்தின் தலமைப் பொறுப்பு மெண்டலுக்கு கிடைக்கவே நிர்வாகப் பணிகள் காரணமாக அவரால் தனது தாவர ஆராய்ட்சிகளைத் தொடர முடியவில்லை.

1884 ஆம் ஆண்டு ஜனவரி 6ந்தேதி தனது 61 வயதில் கிரிகோர் மெண்டல் காலமானபோது அவரது அளப்பறிய ஆராய்ட்சி முடிவுகளை உலகம் கிட்டதட்ட மறந்துபோயிருந்தது. அவர் வாழ்ந்தபோது அவருக்கு எந்த கவுரமும் கிட்டவில்லை. அவர் இறந்து 16 ஆண்டுகள் கழித்து அதாவது 1900 ஆம் ஆண்டில் விஞ்ஞான உலகின் அதிசயங்களில் ஒன்று நிகழ்ந்தது. ஹியூகோ டி ரைஷ் என்ற டச்சு விஞ்ஞானி, ஃகால் கொரன்ஸ் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி, எரிக் வார்ன் டிஷ்மார்க் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி ஆகிய மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி தனித்தனியாக தாவர ஆராய்ட்சிகளை மேற்கொண்டிருந்தனர். மூவருமே மெண்டல் கண்டுபிடித்த விதிகளை தாங்களும் கண்டுபிடித்தனர் என்பதுதான் ஆச்சர்யம். அவற்றைக் கட்டுரையாக எழுத எத்தனித்தபோதுதான் 34 ஆண்டுகளுக்கு முன் மெண்டல் எழுதிய கட்டுரையைப் படித்து வியந்தனர்.

தங்களுடைய ஆராய்ட்சிகள் மெண்டல் கண்டுபிடித்த விதிகளை உறுதி செய்கின்றன என்று மூவருமே தனித்தனியாக கட்டுரைகள் எழுதினர். அதே ஆண்டு மெண்டலின் கட்டுரைப் படித்த வில்லியம் பேட்ஷன் என்ற ஆங்கில விஞ்ஞானி அதனை அறிவியல் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். அந்த ஆண்டே மெண்டலின் வியத்தகு ஆராய்ட்சிகளையும், அவர் கண்டு சொன்ன விதிகளையும் போற்றத் தொடங்கியது உலகம். அவரது ‘மெண்டல் விதிகள்’ என்றே அழைக்கப்படுகின்றன. தாவரங்களைக் கொண்டு செய்யப்பட்ட அந்த ஆராய்ட்சி முடிவுகள் மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். தற்போதைய நவீன அறிவியல் குறையுள்ள மரபனுக்கூறை தனிமைப்படுத்தி நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியமான உயிர்களைப் பிறப்பிக்கவும், நோய்களே வராமல் தடுக்கவும் முனைப்பாக முயன்றுகொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் வித்திட்டது கிரிகோர் மெண்டல் பொறுமையாக மணிக்கணக்கில் கொட்டிய உழைப்பும், சிந்திய வியர்வையும்தான்.

கிரிகோர் மெண்டலுக்கு வாழும்போது கிடைக்கவேண்டிய மதிப்பும், அங்கீகாரமும் கவுரமும் கிடைக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் உயிர் அறிவியலின் அடிப்படையையே கண்டுபிடித்த அவரை ‘ஜினெட்டிக்ஸ் எனப்படும் மரபுவழிப் பண்பியலின் தந்தை’ என்று பெருமையுடன் சுமந்து நிற்கிறது வரலாறு. இது ஒன்றே அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்