மூணாறு ஏரியாவில் மரங்களை வெட்டத் தடை விதித்தது பசுமை தீர்ப்பாயம்!

மூணாறு ஏரியாவில் மரங்களை வெட்டத் தடை விதித்தது  பசுமை தீர்ப்பாயம்!

கேரள மாநிலம் மூணாறு முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்குள்ள மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோன்று உரிய அனுமதி பெறாமல் மலைப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன’ என்று கேரளாவில் வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கும்படி கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கும்மனம் ராஜசேகரன் மனு தாக்கல் செய்தார். கும்மனம் ராஜசேகரன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வின்சென்ட் பனிகுலங்கரா, ஸ்டான்லி ஹெர்சன்சிங் ஆகியோர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் மூணாறு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்த புகைப்படங்களையும், மூணாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த புகைப்படங்களையும் அவர்கள் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மூணாறு மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல், பஞ்சாயத்து நிர்வாகமே அனுமதியளித்துள்ளது. அதேபோன்று மலைப்பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது.

2010–ம் ஆண்டில் இருந்து மூணாறு மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், வெட்டப்பட்ட மரங்கள் குறித்து மூணாறு பஞ்சாயத்து நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று மூணாறு மலைப்பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்ட தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 7–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!