October 19, 2021

சுற்றுச்சுழலைக் காக்க செல்போன்கள் மூலம் வழிக் காட்டலாமே! – சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் யோசனை

தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், தென்மாநிலத்துக்கான மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை இணைந்து சென்னையில் ‘மண்டல சுற்றுச்சூழல் 2016’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்துகிறது. இந்த கருத்தரங்கின் தொடக்கவிழா சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி என்.வி.ரமணா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

green oct 23

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி ஆர்.பானுமதி, ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.எம்.சுந்தரேஷ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்திரகுமார், தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த அனைவரையும் தென்மாநிலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி வரவேற்றார். தொழில்நுட்பப்பிரிவு உறுப்பினர் பி.எஸ்.ராவ் நன்றியுரையாற்றினார்.

சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி ஆர்.பானுமதி பேசும் போது,”தென் மாநிலங்கள் எல்லாம் இப்போது தொழிற்சாலைகளில் முனையமாக மாறிவருகின்றன. அதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன. அதேபோல, தென்மாநிலங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால், தொழிற்சாலை மற்றும் ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அழிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளன. சுற்றுச்சூழல் தொடர்பாக ஏராளமான தீர்ப்புகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமாகும்.

ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்துக்களை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை. இதனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் வழக்குகளை எல்லாம் திருப்பி அனுப்பி, பொதுமக்கள் மத்தியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தும்படி உத்தரவிடுகிறோம்.மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களினால் அடைப்புகள் ஏற்படுகின்றன. சிறு மழை பெய்தாலும், சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இதனால் தான் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

ஐகோர்ட் மதுரை கிளையில் இருந்து விமானம் நிலையம் செல்லும் வழியில் பல நீர்நிலைகள் உள்ளன. அங்குள்ள குளங்களில் உள்ள தண்ணீரை அப்படியே கைகளால் அள்ளி குடிக்கலாம். அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கும். ஒருநாள் அவ்வழியாக செல்லும்போது, கழிவுநீர் லாரியை அங்கு நிறுத்தி, ஒருவர் குளத்தில் கழிவுநீரை விட்டுக்கொண்டிருந்தார். எனக்கு இதயமே நின்றுவிடும் அளவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இதுகுறித்து உடனே எங்கு புகார் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.நீதிபதியான எனக்கே தெரியவில்லை என்றால், பொதுமக்களின் நிலையை யோசித்து பார்க்கவேண்டும். தற்போது நாட்டில் 120 கோடி மக்கள் தொகையில், 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை  அமைச்சர்  கூறியுள்ளார். அப்படியானால் அந்த செல்போன்கள் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய திட்டத்தை அரசு உருவாக்கவேண்டும். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாசு ஏற்படுத்துவோர் மீது உடனடியாக செல்போன் மூலம் புகார் செய்ய ஒரு திட்டத்தை உருவாக்கவேண்டும்.சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலமே, இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்”இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்.வி.ரமணா, “இயற்கை வளங்கள் மனித இனத்துக்கு மிக முக்கியமானது ஆகும். இதனால் தான் ஆதிகாலம் தொட்டே நம் முன்னோர்கள் இயற்கை வளங்களை பாதுகாத்து வந்தனர். மரங்களை வெட்டியவர்களுக்கும், தண்ணீரை அசுத்தம் செய்தவர்களுக்கும் அந்த காலத்திலேயே தண்டனைகளை வழங்கியுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவது? என்பதை திட்டமிடுவதற்கு முன்பே, அந்த தொழிற்சாலைகளை தொடங்க அனுமதி கொடுத்துவிடுகின்றனர்.

பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் பெரிய அளவில் மாசு ஏற்படுத்துகிறது. அண்மையில் ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. காடுகள், நீர்நிலைகளை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் சுத்தமான, நல்ல உணவுக்காக நாம் பெரிதும் போராடவேண்டியது வரும்.

சுற்றுச்சூழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை பல உத்தரவுகள் பிறப்பித்தாலும், பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். சுற்றுச்சூழல் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். மண், கல், மரம் உள்ளிட்டவைகளை கடத்தலில் அப்பாவிகள் தான் சிக்குகின்றனர். இந்த கடத்தலுக்கு பின்னால் இருக்கும் மாபியா கும்பல்கள் சிக்குவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி தன் உரையின் போது, “புதுச்சேரி மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மையை 2011 முதல் 2016–ம் ஆண்டுகளில் சரிவர செய்யாத நகராட்சி ஆணையர்கள் 4 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உண்மையில் இந்த உத்தரவை தீவிரமாக பின்பற்றினால், நிச்சயமாக புதுச்சேரி நாட்டிலேயே சுத்தமான யூனியன் பிரதேசமாக திகழும். ஆனால், பாவம் எங்கள் அதிகாரிகளுக்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதம் விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.ஜோதிமணி உத்தரவிட்டுள்ளார். ஆனால், உண்மையில் இந்த அபராதத்தை புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை மந்திரிக்கும், முதன்மைச் செயலாளருக்கும்தான் விதித்து இருக்கவேண்டும். அவர்கள் தான் திடகழிவு மேலாண்மை குறித்து இறுதி முடிவினை எடுக்கவேண்டும். இனிவருங்காலத்தில், கீழ் நிலை அதிகாரிகளுக்கு நீதிமன்றங்கள் அபராதம் விதிப்பதற்கு பதில், அமைச்சர்கள், அரசு துறை முதன்மைச் செயலாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், திடகழிவுகளை அழிப்பது தொடர்பாக எந்த ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினாலும், புதிய தொழில்நுட்பத்தை கையாள போகிறோம் என்று தான் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை அவர்கள் மேற்கொள்வதில்லை. இதனால், கழிவுகளை அழிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, திடகழிவுகளை அப்புறப்படுத்தி, அழிப்பதில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கி, ஒப்புதல் அளிக்கவேண்டும். அதன்பின்னர், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கழிவுகளை அழிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்”. என்றார்.