விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் வரும் தீபாவளிக்கு விற்பனைக்குத் தயார்!
சாதாரண பட்டாசுகளில் மூலப் பொருட்களின் ஒன்றாக பேரியம் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகமாகி இருக்கும். அதன் காரணமாக பேரியத்தை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதனால் அதற்கு பதிலாக மெக்னீசியம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, விலை குறைந்த பசுமைப் பட்டாசுகள் வரும் தீபாவளிக்கு விற்பனைக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதாகக் கூறி பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப் பட்டு இ ருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அதே நேரத்தில், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்தனர்.
இதையடுத்து, தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வகுத்தது. சாதாரண பட்டாசுகளில் மூலப் பொருட்களின் ஒன்றாக பேரியம் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசு அதிகமாகி இருக்கும்.
அதற்கு பதிலாக மெக்னீசியம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பசுமை பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இதனால் பட்டாசு வெடிக்கும் போது காற்று மாசு 30 சதவீதம் வரை குறையும். இப்படி தயாரிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகள் மீது பசுமைப் பட்டாசுகள் என்பதற்கான குறியீடு இருக்கும்.
பசுமைப் பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.இந்த பட்டாசுகளின் கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
பசுமைப் பட்டாசுகளை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய அவர், மாசுபாடு என்ற அச்சுறுத்தலை சமாளிக்கும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,வழக்கமான பட்டாசுகளைவிட 30 சதவீதம் குறைவான புகையை வெளியிடும் என்றும் குறிப்பிட்டார்.
பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பதற்கு 230 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்கு விற்பனைக்கு வரவுள்ள இந்தவகை பட்டாசுகள் குறைந்த விலையில் கிடைக்கும் என ஹர்ஷ்வர்தன் மேலும் தெரிவித்தார். பசுமைப் பட்டாசுகளில் இடம்பெற்றுள்ள இடுபொருட்கள் காரணமாக அவற்றின் விலை குறைவாகவே இருக்கும் என்று நீரி அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.