February 8, 2023

தாத்தாக்கள் இல்லையே !- உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் உருக்கம்!

“என் மேல் விமர்சனம் வைப்பவர்கள் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள். அவர்களுக்கு எனது செயல் மூலம் பதில் அளிப்பேன். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வேன். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் படி செயல்படுவேன். கமல் தயாரிப்பில் நடிக்க போகும் படத்தில் இருந்து விலகிவிட்டேன். எனது கடைசிப் படம் மாமன்னன் தான். அதற்கு மேல் நடிக்க மாட்டேன்” என்று சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இன்று அவர் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில், உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்க்காக இன்று கவர்னர் மாளிகையில் சரியாக 9.30 மணிக்கு தொடங்கிய விழாவில் முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. பின்னர் கவர்னரிடம் அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். பின்னர் தலைமைச் செயலர் ஆளுநரை பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார். அதன் பின்னர் உதயநிதிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் பதவியேற்பு உறுதிமொழியில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார். கவர்னரும் கையொப்பமிட்டார். மலர் கொத்து வழங்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவிப் பிரமாணம் முடிந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தலைமைச் செயலகம் சென்று அங்கு காலை 10.15 மணிக்கு அவரது அறையில், அமைச்சராக பொறுப்பேற்றார்.

பதவி ஏற்றவுடன் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியின் போது, “வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும், எம்.எல்.ஏ.ஆகவும், பதவியேற்ற போது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது. விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது, செயல்பாடுகள் மூலமே பதிலளிக்க முடியும். குறைகள் இருந்தால் சொல்லுங்கள். அதனை சரி செய்வோம். துறை செயலாளர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடன் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிந்தளவு சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன்.

தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தப் பணிகளில் எனது கவனம் இருக்கும். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இயக்குநர் மாரி செல்வராஜின் ‘‘மாமன்னன்” திரைப்படமே எனது கடைசிப் படமாக இருக்கும். “ என்றார்

இதையடுத்து உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம் பல கண்ட போராளியான முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 4 ஆம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராகத் தலைவர் என்னை நியமித்தார்கள். அதற்கு, என்னை நியமித்தபோதும், இன்று நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன்.

‘நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்பு. அதற்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்’ என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்கத் தொடங்கினோம். கழகம் ஆட்சியில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு பல்வேறு மக்கள் பணிகளைச் செய்யத் தொடங்கினோம். ஊரடங்கு காலத்தில், ஒன்றிய அரசும், அப்போதைய மாநில அரசும் செயலற்று நின்ற நேரத்தில், கழகத்தின் இளைஞர் அணி சார்பில் களப்பணிகளைச் செய்தோம்.

இளைஞர் அணியில் தொகுதிக்கு தலா 10 ஆயிரம் பேர் எனத் தமிழகம் முழுவதும் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தோம். அவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் 3.5 லட்சம் பேரை ஒன்றிய கிளைகளிலும் பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் நிர்வாகிகளாக நியமித்தோம். இளைஞர் அணி பொறுப்புடன், கூடுதலாகச் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினையும் கழகத் தலைவர் அவர்கள் அளித்தார்கள். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முன் மாதிரி தொகுதியாக்க என்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொதுமக்கள் – அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செல்ல அதிக பொறுமை தேவை. அந்த வகையில், தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடமையை உணர்த்தியுள்ளது.

இப்படியான நிலையில்தான், முதலமைச்சர் தனது அமைச்சரவையில் எனக்கு இடமளித்து, கடமையாற்றப் பணித்துள்ளார். இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின் போதும் எதிர்கொள்கிறேன். ‘விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்’ என்று அன்று பதிலளித்து இருந்தேன்.

அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சி முகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம். அவர்களின் மறுஉருவாக வாழும் நம் முதலமைச்சர் அவர்களுக்கு, கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் – என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி மக்கள், இளைஞர் அணியினர், தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்”என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.