கருணாநிதி பர்த் டே + அசெம்பளி வைரவிழா கலக்கிட்டாங்க!

கருணாநிதி பர்த் டே + அசெம்பளி  வைரவிழா கலக்கிட்டாங்க!

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடந்த விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மஜித் மேமன் உள்ளிட்டோர் பங்கேற்று கருணாநிதியை வாழ்த்தி பேசினர்.

விழாவில் ராகுல் காந்தி பேசும் போது, “கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். அவர் மேலும் பல பிறந்த நாள் விழாவை கொண்டாட வாழ்த்துகிறேன். நாம் மிக அதிகமாக ஒருவரை நேசிக்கும்போது நமக்கு பலம் கிடைக்கும். அதுபோல நாம் ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படும் போது எதையும் செய்யும் துணிவு கிடைக்கும் என்று அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கருணாநிதியை கோடிக்கணக்கான மக்கள் நேசிக்கின்றனர். தமிழக மக்களை கருணாநிதி ஆழமாக நேசிக்கிறார். இந்த வலிமையும், துணிவும்தான் கருணாநிதியின் அறிவாற்றலாக திகழ்கிறது. மக்களின் துயரங்களை அவர் புரிந்துகொள்ளவும், அவர்களது கஷ்டங்களை கேட்கவும் இதுதான் காரணம்.

கருணாநிதி தொடர்ந்து பல ஆண்டுகளாக அரசியலில் முக்கிய இடத்தை வகிப்பதாக உமர் அப்துல்லாவும், நிதிஷ்குமாரும் கூறினார்கள். 5 முறை முதல்வராகவும், 60 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும் கருணாநிதி இருந்துள்ளார். இந்தச் சாதனையை இந்தியாவில் வேறு யாராலும் முறியடிக்க முடியாது.

தமிழக மக்களின் குரலாக கருணாநிதியின் குரல் ஒலிக்கிறது. தங்களின் உணர்வுகளைத்தான் அவர் பிரதிபலிக்கிறார் என மக்கள் நம்புகின்றனர். இதுவே அவரது வெற்றிக்கு காரணம். சரத்பவாரின் பேச்சு மகாராஷ்டிரா மக்களின் குரலாகவும், நிதிஷ்குமாரின் பேச்சு பிஹார் மக்களின் குரலாகவும், மம்தா பானர்ஜியின் பேச்சு மேற்கு வங்க மக்களின் குரலாகவும் ஒலிக்கிறது. அதுபோல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.

இங்கே மேடையில் உள்ள தலைவர்களின் பேச்சில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவே பேசுகிறோம். மக்களிடம் இருந்தே நாங்கள் அனைத்தையும் பெறுகிறோம் என்பதை உணர்ந்துள்ளோம். கடந்த 70 ஆண்டுகளாக தினமும் மக்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுகிறார். கற்பனையாக அவர் எதுவும் எழுதுவதில்லை. மக்களின் எண்ணங்களை, உணர்வுகளையே தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர் களுக்காக அவர் எழுதுகிறார்.

தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு இந்தியா முழுவதும் கலந்திருப்பதாக இங்கே வந்துள்ள அனைவரும் உணர்கிறோம். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் இறுமாப்போடு கட்டளையிட விரும்பவில்லை. நாட்டில் உள்ள அனைவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், சிலர் எதிர்தரப்பினரின் கருத்துகளை கேட்காமல் அழிக்க நினைக்கிறார்கள். பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவெடுத்து ஒரே நாளில் 130 கோடி மக்களின் பைகளில் இருந்த பணம் செல்லாது என அறிவித்தார்.

பணமதிப்பு நீக்கத்தால் இந்தியா வின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உலகம் முழுவதும் சொல்கின்றனர். ஆனால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மட்டும் மறுக்கிறார். தாங்கள் நினைக்கும் ஒரே பாதையில் மட்டுமே இந்தியா செல்ல வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஒரே கலாச்சாரம் மட்டுமே இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். இந்தியாவில் ஒவ்வொ ருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. கோடிக்கணக்கான மக்களின் குரல் நசுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. வருங் காலத்தில் மாபெரும் தலைவரின் இடத்தை அவர் நிரப்ப வேண்டி யிருக்கிறது. ஸ்டாலின் சரியான பாதையில் பயணித்துக் கொண்டி ருக்கிறார். இன்று நாம் கருணா நிதியை பாராட்டுவதுபோல ஒரு காலத்தில் ஸ்டாலினையும் பாராட்டுவோம் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று ராகுல் காந்தி பேசினார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, “கருணாநிதி 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இதுவரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒருமுறைகூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது” என்றார்.

புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. தமிழ் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர். கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படக்கூடிய தலைவராக கருணாநிதி இருக்கிறார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. பேசும்போது, “மம்தா பானர்ஜியின் கொள்கையும், கருணாநிதியின் கொள்கையை எதிரொலிக்கிறது. தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதுபோல, வங்காளத்தில் பெங்காலி இருக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, “கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். 60 ஆண்டு காலம் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர். அரசியல், சினிமா, பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவர். சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆவதை தடுத்தவர் கருணாநிதி” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி பேசும்போது, “தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், அமைச்சராகவும் பல்வேறு நிலைகளில் 60 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர் கருணாநிதி. அதுமட்டுமல்லாமல் பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். அவருடைய 94-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசும்போது, “எனது குடும்பத்தினரின் ஈடுபாடு, கருணாநிதியின் குடும்பத்தினருடன் 3 தலைமுறையாக உண்டு. எனக்கு ஒரு தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். ஆனால், 60 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாகவும், முதல்-அமைச்சராகவும் கருணாநிதி இருந்துள்ளார். யாராலும் அசைக்க முடியாத இந்த சாதனையை இந்திய அளவில் செய்துள்ளார். அவரைப் போன்ற தலைவரும், தி.மு.க. போன்ற கட்சியும், தற்போது இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு தேவையாக உள்ளது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசும்போது, “கருணாநிதி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் பன்முக ஆளுமை கொண்ட தலைவர். கருணாநிதி உடல்நலம் பெற்று அவருடைய பேனா மீண்டும் எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று மீண்டும் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் பேசும்போது, “கருணாநிதிக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பாரத ரத்னா விருதை மத்திய அரசு உடனடியாக வழங்கி, இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் பேசும்போது, “இந்தியாவே இந்த விழாவில் இணைந்துள்ளது. தேசிய நலனுக்காக குரல் கொடுத்த மாபெரும் தலைவர் கருணாநிதி. வருகின்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும். தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும்” என்றார்.

முன்னதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள ஆளுநர் பி.சதாசிவம், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதும்  ட்விட்டரில் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான நேற்று  #HBDKalaignar94 ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!