November 29, 2021

2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு கூட்டு வட்டி ரத்து: மத்திய அரசு உத்தரவு!

தொடரும் கொரோனா & ஊரடங்குக் காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களில் வங்கியில் கடன் வாங்கி அந்த தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக் கொண்டபடி, வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பான அறிவிப்பை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடி வரை கடன் பெற்றவா்கள் பயன்பெறுவார்கள்.

அதாவது சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனியார் பெற்ற 8 வகையான கடன்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் முடிய 6 மாத காலத்துக்கு உரிய கூட்டு வட்டியை மத்திய அரசு தானே செலுத்த முன்வந்துள்ளது. அரசுக்கு இதன்மூலம் ரூபாய் 6500 கோடி செலவாகும்.

8 வகையான கடன்களுக்கு மத்திய அரசு 6 மாத காலத்துக்கு கூட்டு வட்டி செலுத்தும் திட்டத்துக்கான நடைமுறைகளை மத்திய அரசின் நிதி சேவை துறை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவில் உள்ள வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட 8 வகையான கடன்களை வசூலிப்பதை 3 மாத காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவித்தது.

பின்னர் மே மாதம் 22ஆம் தேதி மீண்டும் 3 மாதம் கடன் தவணை வசூல் தள்ளிவைக்கப்பட்டது, ஆக ஒட்டு மொத்தமாக 6 மாத காலத்துக்கு கடன் தவணை வசூலை இந்திய ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது.

1. எம். எஸ். எம். இ. கடன்கள்.

2. கல்விக் கடன்.

3. வீட்டு வசதி கடன்.

4. நிரந்தர நுகர்வுப் பொருள் கொள்முதல் கடன்.

5. கிரெடிட் கார்டு கடன்.

6. மோட்டார் வாகனக் கடன்.

7. புரோபஷனல் கடன்.

8. நுகர்வுக் கடன்

ஆகிய கடன்களின் தவணை வசூல் 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட கடன் வட்டிக்கு மேல் வட்டி விதிப்பதா என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் எழும்பின. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய ப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அசோக் பூஷன் ஆர் சுபாஷ் ரெட்டி, ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி மத்திய அரசுக்கு ஆணை ஒன்றை பிறப்பித்தது.

கடன் வசூல் ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் வட்டி மீது வட்டி வசூல் செய்வதை அரசு தடை செய்யவேண்டும். ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களுக்கு மத்திய அரசு வட்டிக்கு மேல் விதிக்கப்பட்ட வட்டிக்கு பொறுப்பேற்று ஒரு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதிலும் கடன் பெற்றவர்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசு கையில் தான் அடங்கி உள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியது.அதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் நிவாரணத் திட்டத்தை வெளியிடுவதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.அப்படி மத்திய அரசு தந்த வாக்குறுதியின் அடிப்படையில் வட்டி மீதான வட்டியை வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் தானே செலுத்த இந்திய அரசு முன் வந்துள்ளது.

இதற்கான நடைமுறைகளை மத்திய நிதி சேவை துறை வெளியிட்டுள்ளது இதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நிலவரப்படி முறையான கணக்குகளுக்கு வட்டி மேல் வட்டி வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்துமத்திய அரசு சார்பில் நிதி அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “வங்கிகளில் கடன் பெற்றவா்கள் கரோனா பேரிடா் காலத்தில் திரும்பச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அவா்களுக்கு நடப்பாண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாத காலத்துக்கு மாதாந்திர தவணை ஒத்திவைப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையை பயன்படுத்தியவா்களுக்கு கூட்டு வட்டி (வட்டிக்கு வட்டி) விதிக்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது, ரூ.2 கோடி வரையிலாக கடன்பெற்றவா்களுக்கு இந்த வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடன் பெற்றவா்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.2 கோடி வரையில் கடன் பெற்ற குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் தனிநபா் கடன்தாரா்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவைதவிர, கல்வி, வீட்டு வசதி, நுகா்வோர் சாதனங்கள், கிரெடிட் கார்டு நிலுவை, மோட்டார் வாகனம், நுகா்வு ஆகிய பிரிவுகளுக்கும் இந்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகை பொருந்தும். அதேசமயம், மேற்கண்ட எட்டு பிரிவுகளில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றவா்கள் இந்த கூட்டு வட்டி தள்ளுபடி சலுகையை பெற முடியாது.

பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு அனைத்து வழிமுறைகளையும் கவனமுடன் ஆராய்ந்த பிறகே சிறிய கடன்தாரா்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்று நிதி அமைச்சகம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது.மத்திய அரசு ஸ்டேட் வங்கி மூலம் அத்தொகையை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் கிடைக்கும் வண்ணம் செலுத்தும் எனவும் தெரிவித்துள்ளது