சின்னாபின்னமான சிபிஐ-க்கு இடைக்கால இயக்குநரானார் நாகேஸ்வர் ராவ்!
சிபிஐ இயக்குநர்கள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் கூடுதல் செயலர் லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ளார். லோக் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணை இயக்குநராக பணியாற்றி வரும் நாகேஸ்வர் ராவ், சிபிஐ இயக்குரின் பொறுப்புகளை ஏற்பார் எனவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தெலங்கான மாநிலம் வாரங்கலை சேர்ந்த நாகேஸ்வர் ராவ், ஒடிஷாவின் 1986-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் இயக்குநரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் நிலவிவந்தது. சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே பனிப்போர் நிலவியது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அவ்வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா மீது சந்தேகம் எழுந்தது.
அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக அமைச்சரவை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா கடந்த ஆகஸ்டு 24ஆம் தேதி கடிதம் எழுதினார். அந்த கடிதம், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சிபிஐ துணை காவல்துறை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ கைது செய்தது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இரண்டு அதிகாரிகளும் பிரதமர் மோடியை நேற்று தனித்தனியே சந்தித்து விளக்கமளித்தனர்.
இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா, அஸ்தானா ஆகிய இருவருக்கும் கட்டாய விடுப்பு அளித்து மத்திய அரசு நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, தன் மீதான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சிபிஐயின் சிறப்பு இயக்குனர் ராக்கேஷ் அஸ்தானா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர். மேலும், ராக்கேஷ் அஸ்தானாவை வரும் 29 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தனர்.