September 18, 2021

ஆட்சி எனக்குத்தான் ! – கவர்னரிடம் அடம் பிடிக்கும் ஓ. பன்னீர் மற்றும் சசிகலா

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வந்தது. அதே சமயம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது சசிகலா குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பினர் தீவிரப்படுத்தினர்.

tn feb 10a

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு 8.50 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திடீரென்று ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். பின், தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினர் என சசிகலா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை கூறினார். இது அதிமுகவில் பெரும் புயலை கிளப்பியது. 5 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் கட்சியில் தங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் இருந்து அவர் காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு 3.53 மணிக்கு போய்ச்சேர்ந்தார்.கவர்னரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாலை 5 மணிக்கும், சசிகலாவுக்கு இரவு 7.30 மணிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.எனவே, கவர்னரை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 4.40 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.

இந்த சந்திப்பின் போது, தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ள விரும்புவதாக கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தெரிகிறது. மேலும் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கவர்னரிடம் அவர் அளித்தார். கவர்னரிடன் 15 நிமிடங்கள் பேசிய பன்னீர் செல்வம் முக்கியமான 4 கோரிக்கைகள் முன்வைத்துள்ளார். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டனர். தற்போது நான் முதல்வராக தொடர அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், நான் சட்டப்பேரவையில் எனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும், சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கு எடுப்பு நடத்தி யாருக்கு பெரும்பான்மை என்பதை தெரியப்படுத்த வேண்டும், ஓட்டு மொத்தமாக அதிமுக எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்த கூடாது தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வைத்ததாக கூறப்படுகிறது

இதேபோல் சசிகலா இரவு 7.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 8 மணி வரை 30 நிமிடம் நடைபெற்றது. சசிகலாவுடன் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தங்கமணி, கே.பி.அன்பழகன், பாண்டியராஜன் உள்ளிட்ட 10 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையனும் கவர்னர் மாளிகைக்கு சென்று இருந்தனர். கவர்னரை சசிகலா சந்தித்து பேசிய போது, அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி, தன்னை சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராக தேர்ந்து எடுத்ததற்கான ஆவணச்சான்றுகளை அவரிடம் வழங்கினார்.கவர்னரை சந்திக்க செல்லும் முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற சசிகலா, அங்கு தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியல் அடங்கிய கோப்பை வைத்து அஞ்சலி செலுத்தினார். எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளிலும் அஞ்சலி செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தெரிவித்த கருத்துகளை கேட்டு அறிந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது முடிவை உடனடியாக தெரிவிக்கவில்லை. தன் பணி வழக்கப்படி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து மத்திய அரசுக்கும், ஜனாதிபதி மாளிகைக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ், நேற்று இரவு அறிக்கை அளித்துள்ளார். மேலும் சட்டநிபுணர்களிடம் ஆலோசித்தபின் அவர் முடிவு எடுப்பார் என தெரிகிறது. அதன் பிறகே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.