March 22, 2023

சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க ஐகோர்ட்டில் அனுமதி கேட்கும் மோடி அரசு!

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சிற்பக்கலைகளின் திருப்பு முனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத் திகழ்வது மாமல்லபுரம் எனலாம்.   அப்பேர்பட்ட மாமல்ல புரம் வர இருக்கும் பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் சென்னை  ஐகோர்ட்டில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க தடை அரசும், கோர்ட்டும் தடை விதித்திருந்த நிலையில் கூட , சமீபத்தில் அதிமுக பேனர் ஒன்று விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்ம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச் – சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. அந்த, மாமல்லபுரத்திற்கு வரும் 11 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின் பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மோடியின் மத்திய வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் முறையிட்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வரும் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், ஏற்கனவே பேனர் வழக்கில் எதிர் மனுதாரராக உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.