October 18, 2021

ஜி.எஸ்.டி: பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை!

மோடி அரசால் கொண்டு வரப்பட்டு மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 28-வது கூட்டம் டெல்லியில் மத்திய (இடைக்கால) நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநிலங்களை சேர்ந்த நிதி மந்திரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 46 திருத்தங்களுடன் பல்வேறு பொருட்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் இருந்து பூரண விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும்

* ரூ. 5 கோடி குறைவாக வர்த்தகம் செய்யும் தொழிலதிபர்கள் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய அனுமதி.

* சர்க்கரைக்கான ஒரு சதவீத செஸ் குறித்து முடிவு எட்டப்படவில்லை.

* மூங்கில் தரை தளங்களுக்கு 12% ஜிஎஸ்டி.யாக குறைப்பு.

* ஓட்டல்களின் உண்மையான கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு.

* எண்ணெய் சந்தை நிறுவனங்களுக்கான எத்தனாலுக்கு 18ல் இருந்து 5% ஆக குறைப்பு.

* காலணிகளுக்கு 5% ஜிஎஸ்டி என்பது ரூ.500ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்வு.
* பெயின்ட் மற்றும் வார்னிஷ்களுக்கு 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.

* அனைத்து தோல் பொருட்களுக்கும் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.

* டிவி (27 இஞ்ச் வரை) வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி, ஜூசர், கிரைண்டர் வகைகளுக்கு 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.

* சிறப்பு வாகனங்கள், டிரக், டிரெயிலர்களுக்கு 28ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.

இந்த அம்சங்கள் யாவும் வரும் 27-ம் தேதி முதல்அமலுக்கு வரும் என நிதி அமைச்சர் பியுஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இன்றைய கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசிய போது, “மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் விதிக்கப்படும், ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும், ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது, மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் சமமாக பிரித்துத் தரப்பட வேண்டும். இதுவரையில் வழங்கப்பட வேண்டிய இதன் நிலுவைத் தொகையை வரும் ௩௧ம் தேதிக்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி., சட்டத்தீன் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மண்டல மையம் சென்னையில் அமைக்கப்படவுள்ளது, வரவேற்கத்தக்கது.

வரி செலுத்துவோருக்கு பயனளிக்க கூடிய வகையில் மாதாந்திர விபர அறிக்கையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும். தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும் 17 கைவினைப் பொருட்கள் மீது வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு செய்வது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.விவசாய சேவைகள், கூட்டுறவு வங்கி சேவைகள், காப்பீட்டு சேவைகள், கல்வி நிறுவனம் சார்ந்த தேவைகள், சிட்பண்டு சேவைகள் உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு மற்றும் வரிகுறைப்பு செய்வது குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்