September 27, 2021

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போக வைத்து விட்டோமா?: ராஜ்நாத் சிங் விளக்கம்!

வட இந்தியாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திய எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு நீர்த்துப்போக செய்யவில்லை என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாமாக முன்வந்து விளக்கம் அளித்தார். இன்று மக்களவை கேள்வி நேரத்தின் போது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த சட்டத்தை அரசு நீர்த்து போக செய்யவில்லை, மாறாக வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என உறுதியாக அளிக்கிறேன் என்று கூறினார். மேலும் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பலதரப்பட்ட மக்களிடம் பரவலாக கோபம் இருந்ததை நான் அறிவேன். நான் இந்த அவையில் ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எஸ்.சி. எஸ்.டி. சட்டத்தை பொறுத்தவரை இந்திய அரசு என்பது ஒரு கட்சி சார்ந்தது அல்ல. மக்கள் அதனை வீதிக்கு கொண்டு வந்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலித் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் நடத்திய முழு அடைப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். எஸ்.சி., எஸ்.டி. மக்களின் நலனில் அரசு முழுமையான அக்கறை கொண்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தற்போதுள்ள நிலையிலேயே நீடிக்கவும், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவும் அரசு மனு தாக்கல் செய்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

முன்னதாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக வட மாநிலங்களில் வெடித்த கலவரத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்களில் அரசு அதிகாரி களை உடனடியாக கைது செய்யக்கூடாது, அவர்களின் மேலதிகாரிகளின் அனுமதிபெற்று உரிய விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளைக் கைது செய்வதற்கு முன் ஆணையத்திடம் முறையான முன் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும். தனிநபர்கள் மீது புகார் கொடுத்தாலும் உரிய விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

பலநேரங்களில் அப்பாவி மக்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் அதிருப்தி எழுந்துள்ளது. எஸ்சி/எஸ்டி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைப் பறிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பை எதிர்த்து வட மாநிலங்களில் நேற்று பந்த் நடத்தப்பட்டது. பாரத் பந்த் எனும் தேசம் தழுவிய இந்த பந்தால் வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன. பொதுத் தேர்வுகள் ரத்து, ரயில், சாலை மறியல் என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பந்தின் போது வெடித்த கலவரத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை தற்போது 10-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கலவரத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர். சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள், தலித் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையடுத்து, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடத்திய கோர்ட், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 10 நாட்களுக்கு பிறகு விரிவான விசாரணையை நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளது.

அப்போது இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.கோயல், யுயு லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு , நாங்கள் அளித்த தீர்ப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல், சுயநல காரணங்களுக்காக சிலர் எதிர்க்கின்றனர். எங்கள் உத்தரவு தலித் மக்களுக்கு எதிரானது அல்ல. புகார் அளித்த உடனேயே கைது செய்யக்கூடாது என்றுதான் கூறியுள்ளோம். விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கலாம். அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த ஒரு சட்டமும், அப்பாவி மக்களைப் பாதித்து விடக் கூடாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.