September 18, 2021

”கொரில்லா” – இறுதிக் கட்ட படபிடிப்பிற்காக சென்னை புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம்!

கோலிவுட்டில் பிரபலமான ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.

இந்த படத்தின் பூஜையின் போதிலிருந்தே எதிர்ப்பு தெரிவித்த ஃபீட்டா போக்கு குறித்து தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா விவரித்த போது “பீட்டா இந்தியா அமைப்பு, எங்கள் இயக்குநர் டான் சாண்டியைத் தொடர்புகொண்டு இந்தப் படத்துக்காக சிம்பன்ஸியைப் பயன்படுத்தாதீர்கள் என்றும், அதனால் விலங்குகளுக்கு நடக்கும் பிரச்னைகள் குறித்தும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். மேலும் இனி ‘கொரில்லா’ படப்பிடிப்பில் உண்மையான விலங்குகளைப் பயன்படுத்தாமல், ஹாலிவுட் படங்களைப்போல சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆனால், நாங்கள் சிம்பன்ஸி சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் படமாக்கிவிட்டோம். இவை அனைத்தும் தாய்லாந்து அரசிடம் முறையான முன் அனுமதி பெற்று, அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே எடுக்கப்பட்டிருக்கிறது. இதை பீட்டா அமைப்பிடமும் தெரிவித்துள்ளோம். அவர்கள், ‘இதன்பிறகு எடுக்கவேண்டிய காட்சிகள் இருந்தால், எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் இதன் இறுதி கட்ட படபிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னை யின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் கடும் கோடையையும் பொருட்படுத்தாமல் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் டத்தோ ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நடிகர் ராதாரவி வழிகாட்டல் படக்குழுவினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது. இந்த படபிடிப்பு நடைபெற்று முடிந்தவுடன் ‘கொரில்லா ’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.”என்றார். இன்றைய இளைய தலைமுறையின் ரசனையை உணர்ந்து, இளம் படைப்பாளிகளின் கூட்டணியில் தயாராகி வரும் ‘கொரில்லா ’, அனைத்து தரப்பினரையும் கவரும் என்கிறார்கள் திரையுலகினர்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

பார்ப்பதற்கு மனிதர்களைப் போலவே இருக்கும் விலங்கு கொரில்லா. மனிதர்களின் மூதாதையர் குரங்குகள் என்று படிக்கும்போதெல்லாம் கொரில்லாக்கள் நம் கண் முன்னே வந்து நிற்கும். அப்படிப்பட்ட கொரில்லாக்கள் பற்றிய சுவையான தகவல்களைப் பார்ப்போமா?

# நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சராசரியாக 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும்.

# கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடி வரை நீளும்.

# கொரில்லாக்களின் கால்களைவிட கைகள் மிக நீளமானவை.

# கொரில்லாக்களால் மனிதர்களைப் போலவே கைகளை ஊன்றாமல் நடக்க முடியும். ஆனால், அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை.

# கொரில்லாக்களுக்குக் கோபம் வந்தால் கைகளைத் தூக்கி நெஞ்சில் அடித்துக்கொண்டு சத்தமிடும்.

# கொரில்லாக்கள் சராசரியாக 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

# கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தத்தின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்.

# கொரில்லாக்கள் மனிதர்களைப் போலச் சிரிக்கவும் செய்யும். சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது.

# கொரில்லாக்கள் மதியம், இரவில் சில மணி நேரம் தூங்கும் பண்புடையவை. தூங்குவதற்கு வசதியாகச் சிறிய மரங்களில் படுக்கைகளைத் தயார் செய்துகொள்ளும். படுக்கைகள் மெத்தை போன்று இருக்கும்.

# கொரிலாக்கள் கிழங்கு, பழம், இலை, தழை, எறும்பு, கரையான் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடும்.

# கூட்டமாகவே வாழும் இயல்புடையவை கொரில்லாக்கள். இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை, குட்டிகளைப் பராமரித்தல், தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை மூத்த கொரில்லாக்கள் கற்றுக் கொடுக்கும்.