June 26, 2022

கூகுள் டூடுல் நினைவூட்டும் ;பெர்லின் சுவர் தகர்ப்பட்ட நாள்’!

ஆம் இதே நவம்பர் 9, 1989ம் வருஷம், முகம் கொள்ளா மகிழ்ச்சியான மக்கள் கூட்டம் கூட்டமாக கோஷம் எழுப்பியப்படி பெர்லின் சுவர் மீது ஏறுவதையும், அதிலும் எண்ணற்ற கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்டிருந்த இடங்களைக் கடந்ததையும் கண்டது—பெரும்பான்மை யான ஜெர்மானியருக்கும் உலகம் முழுவதிலுமுள்ள தொலக்காட்சிப் பார்வையாளர்களுக்கும் நம்பமுடியாததாய் இருந்தததை கூகுள் டூடுல் நினைவூட்டுகிறது.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை ஜெர்மனி ஒரே நாடாக மட்டுமே இருந்தது. ஆனால், ஹிட்லரின் நாசிப்படை போரில் தோற்றதால், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகள், ஜெர்மனியை கூறுபோட்டது மட்டுமல்லாமல், நாட்டின் தலைநகரான பெர்லினையும் சேர்த்து பிரித்தது. இரண்டு ஆண்டுகளில் இந்த நாடுகளின் இடையே மோதல் எழுந்ததால், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஓரணியாக திரண்டு, சோவியத் நாட்டை தனியாக்கியது. இதனால், சோவியத் நாட்டின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு பெர்லின்.

சோவியத்தின் அடக்கியாளும் போக்கை கிழக்கு ஜெர்மனி மக்கள் விரும்பவில்லை. மேற்கு ஜெர்மனியில் நடைபெற்ற முதலாளித்துவ தொழில் புரட்சி (Capitalism) மிகவும் கவர்ச்சிகரமான தாக இருந்ததால், 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மேற்கு ஜெர்மனி நோக்கி அரசு அங்கீகாரம் இல்லாமல் செல்லத்தொடங்கினர். இதனால், கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது.

கிழக்கு ஜெர்மனி மக்கள், மேற்கு ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்வதை கட்டுப்படுத்த, சோவியத் ஆட்சி பல முயற்சிகளை மேற்கொண்டது. அதனுடைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று 155 கிலோ மீட்டர் நீளத்தில் பெர்லின் சுவர் கட்டுவதற்கான பணி துவங்கப்பட்டது. முதலில் முள் வேலி மட்டுமே கட்டப்பட்டு, பின்னர் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, 1975-89 ஆகிய ஆண்டுகளில் கான்கிரீட் சுவராக கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் மக்கள், சுவரைத்தாண்டி செல்லக்கூடாது என்பதற்காக 116 காவல் கோபுரங்களும் பாதுகாப்பு வீரர்கள் ஓய்வெடுக்க 20 பதுங்கு குழி போன்ற சுரங்க அறைகளுடன் 12 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. சுவர்கட்டியதற்கு பிறகும் ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தப்பிக்க முயற்சி செய்தபொழுது, பாதுகாப்பு வீரர்களால் சுடப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போதைய சுழலில் சதிகாரர்கள், முதலாளித்துவ ஏஜண்ட்கள் மற்றும் பாசிஸ்ட்கள் நுழையாமல் இருப்பதற்காகவும், அரிசி, கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை மலிவாக இருப்பதால், மேற்கத்தியர்கள் பலர் கிழக்கு ஜெர்மனியில் வாங்கிச்செல்வதை தடுப்பதற்காகவும் பெர்லின் சுவர் கட்டப்பட்டது என சோவியத் காரணம் தெரிவித்தாலும், மக்கள் புலம்பெர்வதை தடுப்பதற்கன நோக்கத்துடனே பெர்லின் சுவர் கட்டப்பட்டது. பெர்லின் சுவரை அவமான சுவர் என்றும் சகோதரர்களை பிரித்து வைக்கும் கொடுஞ்சுவர் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது. இப்போது அதே அமெரிக்கா பெருஞ்சுவர் எழுப்புவது தனிக் கதை.

ஆனால் காலத்தின் கட்டாயமாக 80களின் இறுதியில், சோவியத் நாடுகள் சிதறியது. கிழக்கு பெர்லின் மீதான அங்கீகாரம் குறைந்ததால், சரியான சமயம் என்று மக்கள் போராட்டத்தை தொடங்கினர். மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தது. வேறு வழியில்லாமல், பாதைகளை திறந்துவிட சோவியத் முடிவு செய்தது. தங்களது சகோதரர்களை வரவேற்பதற்காக மேற்கு ஜெர்மனி மக்கள் ஷாம்பெய்ன் பாட்டிலுடன் மகிழ்ச்சியாக நின்றுகொண்டிருந்தனர்.

ஒரே நாட்டை, இரண்டாக கூறுபோட்டிருந்த பெர்லின் சுவரை இடிப்பதற்கு பீரங்கிகளையோ, குண்டுகளையோ ஜெர்மன் மக்கள் பயன்படுத்தவில்லை. மாறாக, தங்களது கைகளில் கிடைத்த சுத்தியல், கடப்பாறை போன்றவற்றினால், சுவரை தகர்த்தெறிந்தனர். 1989, நவம்பர் 9 ஆம் தேதி, சுவர் இடிக்கப்பட்டது. தனித்தனியாக இருந்த ஜெர்மன் நாடு 1990, அக்டோபர் 3 இல் இணைந்தது. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனும் சேர்ந்து எடுத்த முயற்சியின் வெற்றியே பெர்லின் சுவரின் இடிப்பு. இதனை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9 ஆம் தேதி ஒற்றுமை நாளாக ஜெர்மனியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

தனித்தனியாக இருந்தபொழுது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியை சந்தித்த ஜெர்மன், ஒன்று சேர்ந்த பிறகு அபரிமிதமான வளர்ச்சியடைந்தது. சகோதரத்துவத்திற்கும் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இன்றும் ஜெர்மனி இருக்கிறது என்பதி எல்லாம் கூகுள் இன்னிக்கு நினைவூட்டுகிறது