ஆசிய தடகள போட்டி ;தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்று தமிழர்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார்!

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர் முடிகண்டம் கிராமம். போதிய பேருந்து வசதி இல்லாத ஊர் அது. தந்தை மாரிமுத்து ஊரில் இருக்கும் விவசாய பண்ணையில் கூலித்தொழிலாளியாக வாழ்ந்தவர். தாய் ராஜாத்தி விவசாய கூலி வேலைக்குச் சென்று தங்களின் நான்கு பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். மூத்தமகன் சுப்பிரமணி ஊர்காவல் படையில் வேலை செய்கிறார். அடுத்தது பிறந்தது மூன்று பெண் குழந்தைகள். இருவருக்குத் திருமணமாகிவிட, கடைசி குழந்தைதான் கோமதி. சிறு வயதில் சுட்டி… படிப்பிலும், விளையாட்டிலும். பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தாராம் மாரிமுத்து. அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரிமுத்து உடல்நலக்குறைவால் இறந்துபோக இடிந்து போயிருக்கிறார் கோமதி. ஆனாலும் விடாமுயற்சியில் விளையாட்டில் கவனம் செலுத்திவந்த கோமதி, ஆசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதித்துள்ளார்.

மேலும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலக தடகள போட்டிக்கு தகுதி பெற்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இதன் மூலம் இந்தியா இந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது.