December 6, 2022

ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா – கோ பேக் மோடி ட்ரெண்டிங்-கை ஆரம்பிச்சிட்டாய்ங்க!

தமிழகத்தில் ரூ.4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடக்கி வைக்கிறார். மேலும், ரூ.3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறுகிறது.

கொரோனா நோய்த்தொற்று உச்சகட்டத்தில் இருந்த போது, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனாவுக்குப் பிறகு, நேரடியான நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வருகிறார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை நடைபெறும் விழாவில் 3 புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டமானது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை ரூ.3,770 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. 9.05 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மெட்ரோ ரெயில் பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையானது ரூ.293.40 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிமையாகும். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்தத் திட்டத்தால் ரெயில் பயணம் சுலபமாக நடைபெறும்.

இதேபோன்று, விழுப்புரம்- – கடலூர் – மயிலாடுதுறை- – தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை – -திருவாரூர் இடையிலான ஒற்றை வழி ரெயில் பாதையானது ரூ.423 கோடியில் மின்வழித் தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரிபொருள் சேமிக்கப்படும். இந்த 3 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4,486.40 கோடியாகும். இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அர்ஜுன் போர் டாங்கியை பிரதமர் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த தளவாடமானது, 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டமானது ரூ.2,640 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது எளிதாக்கப்படும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சார்பில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில், மிகப்பெரிய வளாகம் கட்டப்படுகிறது. இதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

போக்குவரத்தில் மாற்றம்

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து போக்கு வரத்துக் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி 14.2.2021 அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

* கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

* மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பி விடப்படும்.

* கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

* அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

* சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். அங்கு 11.15 முதல் 12.30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து 12.35 முதல் 12.50 வரை முக்கிய நபர்கள் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நேரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.

இந்நிலையில், மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இன்று காலையிலிருந்த #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. முதலில் சென்னை அளவில் டிரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக், பிறகு இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாகவும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதை எதிர்த்தும், குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என அமித்ஷா சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த வரிசையில், நடிகை ஓவியாவும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackModi என ட்வீட் செய்திருந்தார். இதை அவரது ரசிகர்கள் பலர் ரீ-ட்வீட் செய்திருந்தனர். மேலும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்தோவியம் வரைந்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.