June 24, 2021

கோவா-வில் பப்ளிக் பிளேசில் ‘தண்ணி’’ அடிக்கக் கட்டுப்பாடு!

இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில் கோவா கடற்கரை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. அங்குள்ள அழகான கடற்கரையும், தட்ப வெப்பமும் வெளிநாட்டவர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. கோவாவுக்கு ஆண்டு தோறும் சுமார் 20 லட்சம் பேர் சுற்றுலா வந்து செல்கிறார்கள். அவர்களில் சுமார் 5 லட்சம் பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். கோவா செல்வோர்,கேண்டலிம் கடற்கரையிலோ அல்லது பனாஜியிலோ காலை உணவை சாப்பிடலாம். இங்கு கோவா பாரம்பரிய கடற்கரை உணவை ருசித்து விட்டு உங்களது சுற்றுலாவை துவங்கலாம்.

goa aug 9

கேண்டலிம் பகுதியில் மட்டும் கலங்கூட், பாகா, கேண்டலிம் என்று மொத்தம் 3 கடற்கரைகள் இருக்கின்றன. இங்கு ஏராளமான நீர் விளையாட்டுக்களும் நடத்தப்படுகின்றன. அதில் விருப்பம் உள்ளவர்கள் நீர் விளையாட்டுக்களில் பொழுதை கழிக்கலாம். பாகா கடற்கரையில் பிரிட்டோஸ் என்ற அழகான குடில்கள் அமைந்துள்ளன. இவை மிகவும் புகழ்பெற்றவை.

அதேப்போல அஞ்சுனா கடற்கரையும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. இது வேறு ஒரு உலகத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அதேப்போல, கோவாவின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைகள் அமைதியின் சொரூபமாக திகழ்கின்றன. இங்கு கடற்கரையோரம் அமைந்த அழகான தேவாலயங்கள் சிறப்பு வாய்ந்தவை.

காலையில் சுற்றுலாப் பயணிகளால் திணறும் கோவா கடற்கரை, மாலையில் கேளிக்கை விரும்பிகளின் சொர்க்கமாக மாறிவிடும். இந்த நகரத்தின் இரவு விடுதிகளும், பப்களும் அதிகாலை வரை திறந்திருக்கும். இங்கு கேளிக்கை பிரியர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அந்த வகையில் இங்கு எந்நாளும் திருவிழா தான். இந்நிலையில் கோவாவில் கடற்கரைகள், திறந்தவெளிகள், நெடுஞ்சாலைகள் என பொது இடங்களில் மது அருந்தப்படுவதாகவும் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் இச்செயலில் ஈடுபடுவதாகவும் அரசுக்கு புகார்கள் வருகின்றன.

இந்நிலையில் கோவா ஆயத் தீர்வை சட்டத் திருத்த மசோதாவை சட்டப் பேரவையில் அம்மாநில அரசு நேற்று அறிமுகம் செய்தது. இதில் கோவா முழுவதும் மது அருந்த தடை விதிப்பதற்கான பகுதிகளை அடையாளம் காண பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மது அருந்துவோருக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கவும் அதில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

“பொது இடங்களில் மது பாட்டில்கள், கேன்கள் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இது அப்பகுதி வழியே செல்லும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவோர் போதையில் பொதுமக்களுக்குத் தொந்தரவு தருவதும் அதனால் அப்பகுதியில் அமைதி கெடுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதும் தொடர்கிறது” என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. கோவாவில் குறைந்த விலை மது மற்றும் கேளிக்கை விடுதி கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்கு காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.