December 2, 2021

கோவா ; முதல்வர் பதவி விலக கெடு விதித்து போராட்டம்!

நம் நாட்டின் தக்கனூண்டு மாநிலமான  கோவா என்றாலே, அதன் எழில்கொஞ்சும் ‘கலங்குட்’, ‘கண்டோலிம்’, ‘பாகா’, ‘கோல்வா’ போன்ற கடற்கரை பகுதிகளும், உ.பா (அதாங்க, உற்சாக பானம்) பார்களும் (இப்போ ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு), கேளிக்கை விளையாட்டுகளும், இரவு நேர கிளப்புகளும் தான் பலருடைய நினைவுக்கு வரும். ஆனால், இதையெல்லாம் தாண்டி சமீப காலமாக அம் மாநிலத்துக்கு முழு நேர முதல்வர் வேண்டும் என்றும் இப்போதைய சி எம் மனோகர் பரிக்கர் 48 மணி நேரத்தில் பதவி விலகவேண்டும் என்றும் கோரி முதலமைச்சர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மிகக்குறைந்த மக்கள்தொகை பட்டியலில், உள்ள கோவாவின் முதல்வராக பா.ஜ.வைச் சேர்ந்த  மனோகர் பரிக்கர் உள்ளார். கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார். பின்னர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு உடல் நலம் தேறி கோவாவில் தனது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் தலைமைச் செயலகத்தில் வழக்கமான அலுவல் பணிகளை அவரால்  தொடர முடியவில்லை. அடுத்தடுத்து கிளம்பிய சர்ச்சையால்  கணைய புற்றுநோயால் முதல்வர் அவதிப்படுவதாக  சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே ஏற்கனவே கூறியிருந்தார்.

அதே சமயம் உடல்நிலையை காரணம் காட்டி முதல்வர் பதவியில் இருந்து  தன்னை விடுவிக்கும் படி பரிக்கர் கோரிய போதிலும் பா.ஜ. தலைமை சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பரிக்கரையே முதல்வராக நீடிக்கும்படி கூறி விட்டது. இதனால் கோவா மாநிலத்தில் கடந்த 9 மாதங்களாக முழு நேர முதல்வர் இல்லாமல் மாநில நிர்வாகம் முடங்கி கிடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், கோவாவில் முதல்வர் பரிக்கர் பதவி விலகக் கோரி போராட்டம் வெடித்துள்ளது. அவரது இல்லம் நோக்கி சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சியினர்  ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

முதல்வர் பதவியில் இருந்து பரிக்கர், 48 மணிநேரத்தில்  விலக வேண்டும். முழு நேர முதல்வர் பொறுப்பு ஏற்க வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்டு வந்தனர். இதில் காங்கிரஸ்  எம்எல்ஏக்கள், மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடான்கர், முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

முதல்வர் வீட்டுக்கு 100 மீட்டருக்கு முன்பே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டனர். ஆனால் உடல்நலக்குறைவினால் போராட்டக்காரர்களை சந்திக்க முதல்வர் பரிக்கர் மறுத்துவிட்டார் என்று அவரது  வீட்டில் உள்ள துணை ஆட்சியர் சஷாங்க் திரிபாதி கூறினார். அதன்பிறகு அவரிடம் மனு அளிக்கப்பட்டது.

போராட்டக்காரர்களின்  பிரதிநிதி எய்ரஸ் ரோட்ரிகஸ் கூறுகையில், “  கடந்த 9 மாதங்களாக முதல்வரைப் பார்க்க இயலவில்லை.  அவருக்குள்ள  நோய் குறித்து மறைக்கப்படுகிறது, இது குறித்து மக்களுக்கு முறைப்படி  அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்களின் பணம் கோடிக்கணக்கில்  அவரது  சிகிச்சைக்காக செலவு செய்யப்படுகிறது.

அதனால் முதல்வர் பதவியில் முழுநேரம் செயல்பட முடியாவிட்டால் மற்றொருவருக்கு வழி விடுங்கள் என்று மனுவில் கூறிஉள்ளோம். பரிக்கர் பதவி விலக 48மணி நேரம் கெடு விதித்து உள்ளோம். அதற்குள் அவர் பதவி விலகா விட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடு வோம்” என்று எச்சரித்தார்.

மேலும் சிவசேனா தலைவர் ஜிதேஷ்காமத் கூறுகையில், ”முதல்வர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். ஆனால் அதற்காக அவர் முதல்வர் பதவியில் நீடிக்கவேண்டும்என்று அர்த்தம் அல்ல” என்று குறிப்பிட்டார்.