August 2, 2021

கோவா பீச்சில் ’சரக்கு’ அடித்தால் மூன்று மாசம் ஜெயில்!

நம் நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமாகவும், குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ள கோவா கடற்கரைகள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்தது. இங்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர்.

இதனால் சமீப காலமாக அங்கு பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. எனவே இதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா வர்த்தக பதிவு சட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த திருத்தத்துக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம் கோவாவில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கும், மதுபாட்டில்களை உடைப்போருக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதே போல சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் சமைப்போருக்கும் மேற்படி தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். .