November 30, 2022

சர்வதேச கை கழுவும் தினமின்று!

லக மக்கள் நாள்தோறும் தங்களது கைகளை நீர் மற்றும் சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கத்தோடு இந்த உலக கை கழுவும் தினம் பன்னாட்டளவில் அனுசரிக்கப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள்  கடைபிடிக்கப்படுகிறது. கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

உண்மையில் கைகழுவுவது என்பது இந்தியர்களின் பாரம்பரிய பழக்கம். குறிப்பாக சாப்பிடும் முன் கைக் கழுவும் பழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் கைகழுவும் பழக்கம் பலவகையான நோய்த் தொற்றுகளுக்கு தீர்வு காணலாம். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி வயிற்றுப்போக்கால் ஒவ்வொரு நாளும் 1.8 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும், உடல் சுத்தமுமே இந்த எண்ணிக்கையை குறைக்க உதவும் என்கிறது. இப்படி கை கழுவுவதால் பலவகையான நோய் தொற்றுகளை கட்டுப்படுத்தலாம்.

எதற்காக கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்?

உள்ளங்கையில் அப்படி என்ன அழுக்குகள் சேர்ந்துவிட போகிறது என்று கேட்கிறீர்களா? கண்ணுக்குத் தெரியாத பல்வேறு நோய்க்கிருமிகள் கைகளில்தான் இருக்கின்றன. கைகளைச் சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது கிருமிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், ஜலதோஷம் போன்ற நோய்களை உண்டாக்கி விடுகின்றன. அதற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு தற்போது வரை நம்மை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று என்று சொல்லலாம்.

எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்

குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிய பிறகும், சாப்பிட்ட பிறகும், கழிப்பறைகளைப் பயன் படுத்தும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே வீட்டு பெரியவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த கற்றுத்தரும் போதும் மறக்காமல் இதைக் கற்று தர வேண்டும்.

பெண்கள் சமையல் செய்யும் போது கைகளை முறையாக சோப்பு போட்டு கழுவிய பிறகு தான் சமைக்க வேண்டும். சமைக்கும் போது மட்டுமல்ல உணவு பொருள்களைப் பயன்படுத்தும் போதும் காய்களை நறுக்கும் போதும் என ஒவ்வொரு முறையும் கைகளை நன்றாக கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கழிப்பறைப் பயன்பாட்டுக்குப் பிறகு சிறுநீர், மலம் கழித்த பிறகு உரிய முறையில் கைகளைக் கழுவாமல் இருப்பது அதிக ஆரோக்கிய குறைபாட்டை உண்டாக்கிவிடும். ஏனெனில் மலம் கழித்த பிறகு வெறும் நீரால் கைகளை கழுவும் போது, மலத்தின் வழியாக கைகளில் கிருமிகள் பரவ அதிக வாய்ப்ப்புண்டு. அதனால் கண்டிப்பாக சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவுவதை அனைத்து வயதினருமே கடைப்பிடிக்க வேண்டும்.

எப்படி கை கழுவுவது?

வெளியிலிருந்து வரும் போது சோப்பு போட்டு தேய்த்து ஓடும் நீரில் கண்டிப்பாக கைகளை 30 விநாடிகள் தொடர்ந்து கழுவ வேண்டும். அதுவரை கைகளை முகத்தில் தடவுவதோ வாயருகில் கொண்டு செல்வதோ, கண்களை துடைப்பதோ கண்டிப்பாக செய்யகூடாது. இதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும்.

இப்படி கை கழுவுவது சிறிய விஷயம் தான். ஆனால் இதை முறையாக செய்யும் போது உடலில் நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படுகிறது. தண்ணீரில் கைகளை கழுவினாலே சுத்தம் செய்தது என்று நினைக்க வேண்டாம். அதற் காக வாஷ்பண்ணிக்கிட்டே வாஷ் பண்ணிக்கிட்டே இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

கைகளை வெறும் நீரில் கழுவாமல் சோப்பு அல்லது சோப்பு நீர் போட்டு தேய்த்து கழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இப்படி செய்வதன் மூலம் தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ளலாம்.

சோப்பு போட்டு கைகளை உடனே கழுவாமல் 30 விநாடிகளாவது கைவிரல்கள் நக இடுக்குகள் விரல் இடுக்குகளைக் கழுவுவதன் மூலம் 80 சதவீதமான தொற்று நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

நிலவளம் ரெங்கராஜன்