October 16, 2021

கஜினிகாந்த் – விமர்சனம் =முழு நீள நகைச்சுவை குடும்பப் படம்!

செல்போனும் கையுமாக அலையும் இந்த கலியுகத்தை இயந்திரயுகம் என்று சொல்வதுதானே சரியாக இருக்கும். இன்றைய மனிதர்கள் செய்ய வேண்டிய பல வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடு பழகியதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள். துன்பம் வரும்போது சிரியுங்கள், வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது. நன்கு சிரித்துப் பழகுபவனுக்கு அதிக நண்பர்கள் இருப்பர். சிரிக்காத சிடுமூஞ்சிகளுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர். நாம் சிரித்தால் நம்மோடு சேர்ந்து அனைவரும் சிரிப்பர், சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது, வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்ப தில்லை. ஆனால் சிரிப்பின் மகிமையை உணர்ந் தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.  நாம் நலமாக இருக்க ஒன்று, நாம் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாதவர்கள் கஜினிகாந்த் மாதிரியான சினிமாக்களை பார்க்க வேண்டும்.

சிரிப்பதற்கு காரணம் தேவையில்லைதானே.. அது போல் இந்த சினிமாவில் கதையெல்லாம் தேட தேவையில்லை..2015ல் தெலுங்கில் நானி – லாவண்யா திரிபாதி நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் டடித்த `பலே பலே மகாடிவோய்’ படத்தின் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ். ஞாபக மறதி என்ற குறைபாடு கொண்ட நாயகன் கல்யாணம் செய்ய பெண் கிடைக்காத நிலையில் சினிமாவுக்கே உரித்தான கண்டவுடன் சாயிஷா-வை காதலித்து அதில் ஜெயித்தானா இந்த கஜினி காந்த்? என்பதை நகைச்சுவையாக சொல்கிறது படம்.

ஆடை, ஆபாசம் போன்றவற்றில் இலை மறை காய்மறையாக போய் கொண்டிருந்த கோலிவுட்டில் திடீரென அம்மணமாக தோன்றி ’எல்லோரும் நியூடை விரும்புறாங்க’ என்ற ஓப்பன் பேட்டி யெல்லாம் கொடுத்தபடி ’ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற டைட்டில், முனகலுடன் இரண்டுப் படங்களை பக்கா அடல்ட் காமெடிப் படங்களாக இயக்கி ரிலீஸ் செய்து இண்டஸ்ட்ரியையே முகம் சுளிக்கச் செய்த இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமாரின் மூன்றாவது படமிது. ஆனால் இது யு சான்றிதழ் படம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

ஆர்யா நிஜத்தில் இருப்பது போல இந்த படத்தில் ப்ளேபாய் ரோலில் கலக்கியிருக்கிறார். தொடர்ந்து ஆவரேஜ் ஃபிலிம்களை கொடுத்து வந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு ரசிக்க வைத்திருக்கிறார். ஹீரோயின் சாயிஷா வழக்கம் போல் அழகு மெழுகு சிலையாக அடிக்கடித் தோன்றி பிரமாதமாக டான்ஸ் எல்லாம் ஆடி கவர்கிறார். இதுநாள் வரை தோன்றிய எல்லா படங் களிலும் மொக்கை போட்டு எரிச்சலூட்டி வந்த சதீஷ், இந்த படத்தில் தனி ஸ்கோர் செய்திருக் கிறார். அவரது டைமிங் காமெடியும், ரைமிங் வசனங்களும் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. ஆர்யாவுக்கு உதவி செய்யவதற்காக சம்பத்திடம் ஆள்மாறாட்டம் செய்யும் சதீஷின் ஆக்டிங் நிஜமாலுமே சிரிப்பை வர வைக்கிறது என்று சொன்னால் நம்போணும், அத்துடன் ஆர்யா வின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் உமா பத்மநாபன் ஜோடியின் சேஷ்டைகளும் நல்ல காமெடி ஷோ.

ஆனாலும் அவ்வப்போது டிவி சீரியல் பார்க்கும் ஃபீலிங் வந்தாலும், அடிக்கடி ஆர்யா & சதீஷ் காம்பினேஷனில் லேட்டஸ்ட் டயலாக் காமெடி பிட்டுக்களை போட்டு சமாளித்து விடும் இயக்குநர் இனி முழு நீல அடல்ட் எடுப்பதற்குப் பதில் இது போன்ற முழு நீள நகைச்சுவை குடும்பப் படம் எடுப்பது தமிழ் சினிமாவுக்கு நல்லது.

மார்க் 5 / 3