குழந்தைக் காப்பகங்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்! – மேனகா எச்சரிக்கை

குழந்தைக் காப்பகங்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்! – மேனகா எச்சரிக்கை

நம் நாட்டில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும். ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ய, பிச்சை எடுக்க, விபச்சாரத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த, பணயம் வைத்து மிரட்டுவதற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக பிறந்த குழந்தைகளும், சிறுவர்-சிறுமிகளும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சிலரும், நெட்வொர்க் அமைத்து பலரும் குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

இதனிடையே சட்ட விரோதமாக குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதை தடுக்க, குழந்தைகள் காப்பகங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு மத்திய அரசு அமைப்புடன் உடனடியாக இணைக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்படும் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடாக குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் கீழ் செயல்படும் அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் ஆய்வு நடத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மேனகா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

மாநிலங்களில் செயல்படும் அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் தத்தெடுப்புக்கென தேசிய அளவில் செயல்படும் உயரிய அமைப்பான மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில் ஒரு மாதத்திற்குள் இணைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

சிறுவர் நீதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் படி, அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில் பதிவு செய்து இணைப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் சில அனாதை ஆசிரமங்கள் இதனை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 2,300 குழந்தைகள் காப்பகங்கள் மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில் பதிவு செய்து இணைப்பில் உள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்பகங்கள் இணைப்பிற்காக நிலுவையில் உள்ளன. ஆனால் பதிவு செய்து இணைப்பில் உள்ள 2,300 காப்பகங்களும் இதுவரை தத்தெடுப்பு முறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்று மேனகா காந்தி வருத்தம் தெரிவித்தார். அத்துடன் மாநில அரசுகள் அனைத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களையும் (CCI) பதிவு செய்து அவற்றை அடுத்த மாதத்திற்குள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்திற்குள் (CARA) இணைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் கூற்றுப்படி, தற்போது 2 லட்சத்து 32 ஆயிரத்து 937 குழந்தைகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தை காப்பகங்களில் வசித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!