ஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

ஜெமினி-க்கு வயசு 75 – பிளாஷ் பேக் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

ஜெமினி ஸ்டூடியோ -75ஆம் வருஷமுன்னு போட்டு ஒரு போஸ்டரைப் பார்த்து கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பினோம்.இப்போதைய ஜெமினியின் ஓனர்கள் என்று தெளிவாக தெரியவில்லை. ஆனால் வாசன் உருவாக்கிய ஜெமினி ஸ்டூடியோ மற்றும் லோகோ குறித்து விகடன் எம்டி பாலசுப்பிரமணியம் சில சமயம் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். பின்னாளில் அந்த ஸ்டுடியோவை யாருக்கோ விற்று விட்டதாக வந்த தகவல் உண்மையா? என்று மட்டும் கேட்காமல் அப்படி யாருக்காவது விற்றால் உங்கள் பங்காக கிடைத்த இடத்தில் எங்களுக்கு ஏதாச்சும் கொடுக்கலாமில்லையா என்று போர்ட் மீட்டிங் ஒன்றில் கேட்டதும் குபுக் என்று வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு ஒரு பங்கோ, எந்த ரைட்ஸூமோ கிடையாது-ன்னு எழுதிக் கொடுத்துட்டேன் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது..!

ஹூம். அது போகட்டும் நம்ம ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மிற்க்காக இதோ கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஜெமினி வரலாறு.

கிட்டத்தட்ட 90 வருசத்துக்கு முன்னாடி அதாவது 31.10.1931-ல், முதல் தமிழ் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியாச்சு. அதைத் தொடர்ந்து கொஞ்சம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த தமிழ் சினிமா உலகில் ல்1934-ல் தொடக்கக்கால பேசும் பட பிதாமகர்களில் குறிப்பிடத்தக்கவராக கே.சுப்பிரமணியம் இருந்தார். அவர் முதன் முதலாக இயக்கிய படம் ‘பவளக்கொடி’. அதன் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து,1935-லிருந்து வரிசையாக 6 படங்களை மும்பை, கொல்கத்தா ஸ்டூடியோக்களில் தயாரிச்சு இயக்கி வந்தார்.

அப்படி ஒவ்வொரு படத்தையும் மெட்ராஸில் இருந்து நார்த் இண்டியா போய் படம் எடுப்பது என்பது சிரமமாக இருந்தது. செலவும் எக்கச்சக்கமாச்சு. அதுனாலே, இங்கேயே நம்ம மெட்ராசிலே சகல வசதிகளுடன் கூடிய ஒரு நல்ல ஸ்டூடியோவை நிர்மாணிப்பது என்று கே.சுப்பிரமணியம் முடிவு செஞ்சார். தன் யோசனையை சொல்லி சில பங்குதாரர்களைச் சேர்த்துக் கொண்டு மவுண்ட்ரோடும், அதன் மேற்கே கோடம்பாக்கம் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தை ஒட்டிய ‘ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்னும் பெயரில் இருந்த ஒரு பெரிய தோப்பை விலைக்கு வாங்கினார். அங்கு ‘மோஷன் பிக்சர் புரொடியூஸர்ஸ் கம்பைன்ஸ்’ ஸ்டூடியோவை உருவாக்கி தன் படங்களைத் தயாரிச்சு வந்தார்.

1940-ல் அன்றைய பிரபல ‘நவாப்’ டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி புகழ் பெற்றது ‘இன்பசாகரன்’ என்ற நாடகம். இந்த நாடகத்தை அதே பெயரில் ‘மகாலட்சுமி ஸ்டூடியோ’ என்னும் பட நிறுவனம் தயாரித்தனர். கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் அவருடைய சொந்த ஸ்டூடியோவிலேயே இந்தப் படம் தயாராச்சுது. படத்தில் நவாப் ராஜமாணிக்கமும், அவரது நாடகக் குழுவினருமே நடித்தனர். படம் முழுவதும் தயாரித்து முடிந்து அதன் பிரதிகளும் எடுக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 21-ந்தேதி அன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு ஸ்டூடியோ முழுவதுமே எரிஞ்சு போயிடுச்சு. அத்துடன்கூட எடுத்து முடித்த ‘இன்பசாகரன்’ படத்தின் நெகட்டிவ்களும், அதைச் சேர்ந்த ஏனைய பாசிட்டிவ் பிலிம் ரீல்களும் எரிந்து சாம்பலாகி விட்டன.

இந்த எதிர்பார துயரமும், ஏற்கனவே எடுத்த சில படங்களின் நஷ்டம் காரணமாகவும், தனது கனவு ஸ்டூடியோவை விற்க கே.சுப்பிரமணியம் முடிவு செய்தார். இதற்காக தான் பிறந்த அதே தஞ்சையில் பிறந்த எஸ்.எஸ்.வாசனை அணுகினார். எஸ்.எஸ்.வாசன் அப்போ ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்கியூட்’ என்ற பேனரில் திரைப்படங்களை கமிஷன் அடிப்படையில் வாங்கி விநியோகம் செய்து வந்தார். அவரிடம், தனது ஸ்டூடியோவை ஏலத்தில் எடுத்து அதன் மூலமாகப் படத் தயாரிப்பிலும் ஈடுபடும்படி ஆசை வார்த்தை சொல்லி மயக்கிப்புட்டார். (கட்டிங் கண்ணையா)

வாசனும் இதற்கு உடன்பட்டு, வழக்கமான ஏலம் அன்றி டெண்டர் மூலமாக, வேறு எந்த ஒரு ஏலதாரரும் குறிப்பிடாதபடி 86 ஆயிரத்து 427 ரூபாய் 11 அணா மற்றும் 9 பைசா என்று எழுதி பெட்டியில் போட்டிருந்தார். அதைப் பிரித்துப் பார்த்த நடுவர் சிரித்ததோடு, வாசனின் சாதுர்யத்தையும், சாமர்த்தியத்தையும் மெச்சி அவருக்கே சுப்ரமணியத்தின் ‘மோஷன் பிக்சர்ஸ் புரொடியூஸர் கம்பைன்ஸ்’ ஸ்டூடியோவைக் கொடுத்துட்டார்.

வாசன் அதற்கு தனது ராசியான ஜெமினியின் பெயரால் ‘ஜெமினி ஸ்டூடியோ’, ‘மூவிலேண்ட்’ என்று பெயரிட்டார். பிரபல ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் புதல்வரான, ராஜா சர் முத்தையா செட்டியாரின் திருக்கரங்களால் திறப்பு விழா நடந்துச்சு. 1941-ம் ஆண்டு முதன் முதலாக ‘அமிர்தம்’ டாக்கீசாரின் ‘மதனகாமராஜன்’ படத்தைத் தயாரித்து தனது ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ விநியோக கம்பெனி மூலம் வெளியிட்டு வெற்றி பெற்றார்.அதுக்கு முன்னாடி எல்லாம் ‘தீப்பிடித்த இடம் விளங்காது’ என்று பொதுவாகச் சொல்வது உண்டு. இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர்கள் எனக்குத் தெரிந்து இருவர். ஒருவர் ஜெமினி வாசன்.

இன்னொருவர் ஏவி.எம். செட்டியார். காரைக்குடி தேவகோட்டை ரஸ்தாவில் செட்டியார் முதன் முதலாக ஓலைக்கொட்டகையில் உருவாக்கிய ஏவி.எம். ஸ்டூடியோ ஒரு சமயம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் எந்த ஒரு சிறு சேதமும் இல்லாமல் பொருட்கள் மீட்கப்பட்டு, அதன் பிறகு அதன் பிறகு 1947-1948-ல் அவர் எடுத்து வெளியிட்ட ‘நாம் இருவர்’, ‘வேதாள உலகம்’ ஆகிய இரு படங்களும் மகத்தான வெற்றி பெற்றன.

இத்தனைக்கும் தன் ஜெமினி-யை ஒரு ஆங்கிலேயரை பொது நிர்வாகியாக நியமித்து எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டூடியோவை அரசியல் தலைவர்களும், அயல்நாட்டவரும் வந்து பார்த்துப் பாராட்டும்படிச் செய்தார். இந்த ஸ்டுடியோ காட்டில் மான்களும், மயில்களும் வளர்க்கப்பட்டன. நகர எல்லைகளுக்குள் மிருகங்களை வளர்க்க சென்னை மாநகராட்சியிலிருந்து அனுமதி பெறவேண்டும். அந்த அனுமதிப் படிவத்தில் ஏராளமான மிருகங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒட்டகம் கூட உண்டு. ஜெமினி ஸ்டுடியோவில் ஒருமுறை முதலை ஒன்று வந்துவிட்டது. ஒன்றிரண்டு மான்களைக் கொன்றுவிட்டதெல்லாம் தனிக் கதை.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஜெமினி ஸ்டுடியோ தென்னிந்தியாவின் முதல் வரிசைத் திரைப்படத் தயாரிப்பு மையமாக இருந்தது. இந்தியாவின் மூலை முடுக்களிலிருந்து கடிதங்கள் வந்து குவியும். இன்று நட்சத்திர நடிக, நடிகையருக்கு எழுதுவதுபோல அன்று ஸ்டுடியோவுக்கு எழுதுவார்கள். ஜெமினி தவிர ஏ.வி.எம். பிரசாத் போன்ற பெயர்களும் வட இந்தியாவில் பிரபலம். வேறு ஸ்டுடியோ அல்லது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கடிதம் எழுதுவார்களோ, இல்லையோ, ஜெமினிக்கு எழுதுவார்கள். அநேகமாக ஒவ்வொரு கடிதத்திற்கும் பதில் தரப்படும்.

ஜெமினி ஸ்டுடியோ சென்னை நகரத்தின் மத்தியில் அமையப்பெற்றிருந்தது., அன்று ஜெமினி ஸ்டுடியோ வாசலிலேயே பஸ் நிறுத்தம். சாலையிலேயே ஒரு வாசல் வளையம். ஜெமினி இரட்டையர்கள் குழலூதும் முத்திரைப் பொம்மைச் சின்னம் பளிச்சென்று தெரியும். வளையம் வழியாகப் பார்த்தால் ஒரு சோலையாகத் தெரியும்.

பின்னாளில் 1958–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி தென்னக திரைவரலாற்றில் முதன்முதலாக ஜெமினி கலர் லாபாரட்டரி திறக்கப்பட்டது அதன் தனிச்சிறப்பு.

அப்பேர்ப்பட்ட ஜெமினி சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துதான் விகடன் என்னும் ஆலமரத்தை வளர்த்தார் பாலு சார்.. ஹூம்.. இப்போ அந்த ஜெமினி -க்குதான் 75 வயசு போஸ்டர் ஒட்டி கொண்டாட ஆயத்தம் நடக்குது.

error: Content is protected !!