September 27, 2021

‘அவங்க’ளை இதுலே சேர்க்கப்படாதுன்னா படாது! – சுப்ரீம் கோர்ட் விளக்கம்

ஓரினச் சேர்க்கையாளர்களை மூன்றாம் பாலினத்தவராக் கருதக் கூடாது என்று விளக்கமளித்துள்ள சுப்ரீம் கோர்ட். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனாவசியமாக தாக்கல் செய்த மனுவை ஏன் அபராதத்துடன் தள்ளுபடி செய்யக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

court july 1

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினத்தவர் என்ற சட்ட அங்கீகாரத்தை அளித்து கடந்த 2014-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை என அனைத்துச் சலுகைகளையும் அவர்களுக்கு வழங்குமாறும், சமூகத்தில் பின்தங்கியவர்களாகக் கருதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்குமாறும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தின் கீழ் ஓரினச் சேர்க்கையாளர்களும் வருகின்றனரா? என்பது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில்சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் டிரான்ஸ்ஜென்டர் என்ற வார்த்தையை இலக்கணப்படி பகுப்பாய்ந்தால், பாலினத்துக்கு அப்பால் உள்ளவர்கள் என்று பொருள். அதன்படி பார்த்தால், ஓரினச் சேர்க்கையாளர்களும் அவ்வாறு மூன்றாம் பாலினமாகக் கருதப்பட வேண்டியவர்களா? என்று அந்த மனுவில் மத்திய அரசு கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணீந்தர் சிங், “மூன்றாம் பாலினத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக வெளியான தீர்ப்பு தெளிவாக இல்லை’ என்றார்.

இதையடுத்து திருநங்கைகள் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், “கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது’ என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “ஏற்கெனவே வெளியான தீர்ப்பில் எந்த குழப்பமும் இல்லை. அது தெளிவாகத்தான் உள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களை மூன்றாம் பாலினத்தவராகக் கருத முடியாது. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுதொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.