January 29, 2023

ல்ல சினிமா என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தால் விடிய விடிய விவகாரத்தை இழுத்துக் கொண்டு போகும் காவேரி டீக் கடை ரசிகர்கள் நிறைந்த உலகமிது. ஆனால் நாம் ஒரு திரைப்படத்தை மகிழ்ச்சியுடன் பார்ப்பதற்கும், ஒரு சினிமாவை மனதாரப் பாராட்டுவதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒரு காமெடிப் படத்தை விழுந்து புரண்டு சிரித்துக்கொண்டே ஜாலியாகப் பார்க்கிறோம். ஆனால், அந்தப் படம் நமது மனதில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்றால் – மறுநாள் எழுந்தவுடன் அப்படம் நமது நினைவிலேயே இல்லை என்றால் – அது ஒரு வகை. அதுவே, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதே நமது மனதில் ஏதோ ஒரு மாற்றம் எழுந்து, மறக்க முடியாத அனுபவத்தை அந்தப் படம் தந்து, நம்மை நன்றாக யோசிக்க வைத்து, அதன்மூலம் நமது புரிதலை மேம்படுத்தி, ஒரு மனிதராக நமது வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்றால் அதை மனதார பாராட்டுகிறோம்..சுருக்கமாக சொல்வதானால் ஒரு படத்தை பார்த்தால் அதன் கனம், வீச்சு மனதை என்னமோ செய்தது என்று சொல்லவேண்டும். அவ்வாறான படங்கள் எப்போதாவதுதான் வரும்.. அப்படி வந்திருக்கும் படமே ‘கார்கி’.

அதாவது மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த நாயகி சாய் பல்லவி டீச்சராக வேலைப் பார்த்து வருகிறார். அவரது அப்பா அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேன் வேலைப் பார்த்து பிழைப்பு ஓட்டும் சூழலில், மேற்படி அப்பார்ட்மெண்ட்டில் 9 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப் படுகிறாள். இதற்கு காரணம் என்று சொல்லி நான்கு வட இந்திய இளைஞர்களை கைது செய்யும் போது, ஐந்தாவது நபராக சாய் பல்லவி அப்பாவையும் சேர்த்து கைது செய்கிறது காவல்துறை. அய்யய்யோ.. என் அப்பா அப்படிஎல்லாம் செய்திருக்க மாட்டார், அவரை நான் காப்பாற்றுவேன் என களத்தில் இறங்கும் நாயகி. இறுதியாக உண்மையில் யார் அந்த குற்றத்தை செய்தது? சொன்னபடி தனது அப்பாவை காப்பாற்றினாரா ? என்பதே கார்கி படத்தின் கதைச்சுருக்கம்.

படத்தின் நாயகி மற்றும் நாயகனாகவும் வரும் சாய் பல்லவி இன்னொரு அபிநய சரஸ்வதியாகிவிட்டார்.. தனக்குப் பிடித்த டீச்சர் ரோலில் தான் ரியலில் செய்யும் அப்பா பாசக் கதையில் வ்ளுத்து வாங்கி அபாரம் என்று சொல்ல வைக்கிறார். இளம் வக்கீலாக வரும் காளி வெங்கட் அடடே சொல்ல வைக்கிறார். சில இடங்களில் தனது ஒன்லைன் மூலம் ரசிக்க வைக்கிறார். மேலும் சாய் பல்லவியின் அப்பாவாக வரும் ஆர் எஸ் சிவாஜி, நடிகர் சரவணன்,ஜெயபிரகாஷ் போன்றோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர். கேமியோ ரோலில் வரும் ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக செய்திருக்கிறார்.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை இப்படத்திற்கு பலமாகவும், உயிர்ப்பாகவும் அமைந்துள்ளது. ஷ்ரயந்தியின் ஒளிப்பதிவில் காட்சிகளுகேற்ற சரியான ஒளி அமைப்புடன் உணர்வுகளை சேர்த்து படம் பிடித்துள்ளார்.

விவரமறியா குழந்தைகளுக்கு எதிரான பாலியல்ரீதியான வன்முறை தினசரி உலகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் குழந்தைகளின் பாலியல்ரீதியான வன்முறைகளைப் பொறுத்தவரை, உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஒவ்வொரு 100 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது என்றெல்லாம் புள்ளி விபரம் வெளியாகியும் விழிப்புணர்வு பெறாத நாட்டு மக்களுக்கு தேவையான சப்ஜெக்டை தேவையான கலவைகளுடன் வழங்கி தமிழ் சினிமாவுக்கு ஒரு ஒளி விளக்கை அளித்திருக்கிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன். இவர் நிவின் பாலி நடிப்பில் ‘ரிச்சி’ படத்தை டைரக்ட் செய்தவர் இந்த கார்கி மூலம் ஏதோ ஒரு மெசேஜ் சொல்ல வருகிறார் என நினைக்க வைத்து கிளைமாக்ஸில் சூப்பரான டுவிஸ்ட் கொடுத்து அசத்தி விட்டார். கூடவே வசனங்கள் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருப்பது கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.  ஆனால் டப்பிங் மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

மொத்தத்தில் சினிமாவை மட்டுமின்றி குடும்ப உறவை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஃபேமிலியோடு பார்க்க வேண்டிய படப் பட்டியலில் இடம் பிடித்து விட்டாள் இந்த கார்கி

மார்க் 4.25/5