உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை- வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகி யுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் என தகவல் வெளியாகியது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து நேற்று காலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைன் நகரில் உள்ள பிரபல மஹாகால பைரவர் கோயிலுக்கு வந்த விகாஸ் துபேவை அந்த கோயிலின் பாதுகாவலர் சாமர்த்தியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

உடனே  அங்கிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு கார் மூலமாக விகாஸ் துபேவை போலீசார் அழைத்து வந்தனர்.விகாஸ் துபேவை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் கான்பூர் அருகே விபத்துக்குள்ளானது. இதனை பயன்படுத்தி விகாஸ் துபே தப்ப முயன்றுள்ளான். இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்க முயன்றனர். இதில் விகாஸ் துபே படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவன் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது.