September 27, 2021

போஸ்ட் ஆபீஸூலே ஸ்டாம்ப் கிடைக்காது – ஆனா கங்கை தீர்த்தம் கிடைக்குமாம்!

காசிக்கு போக வேண்டும், கங்கையில் நீராட வேண்டும் என்பது பெரும் பாலான இந்துக்களின் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு சென்று வருவதற்கான வாய்ப்பு வசதிகள் இல்லாமல் கனவோடு அவர்களது வாழ்க்கை முடிந்து போகிறது. அதேபோல் ஹோமங்கள், பூஜைகளில் கங்கை புனித நீரை பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் இது சாத்திய மில்லாததால் தூய்மையான பாத்திரத்தில் சாதாரண தண்ணீரை வைத்து “கங்கேச யமுனே சைவ கோதாவரி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னிதிம் குரு” என்று வேத மந்திரத்தை சொல்லி அனைத்து நதிகளின் புனித நீராக பாவித்து பயன்படுத்துகிறார்கள்.

gangai july 11

இப்போது இந்த மனக் குறையை போக்க கங்கை புனித நீரை நாடு முழுவதும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு தொடங்கி உள்ளது. தபால் அலுவலகங்கள் மூலம் இந்த புனித நீர் விற்பனை செய்யப்படுகிறது. இது 500 மில்லி, 200 மில்லி பாட்டில்களில் விற்பனை ஆகிறது. கங்கை நீர் 500 மில்லி ரூ.35, 200 மில்லி ரூ.25, ரிஷிகேஷ் தண்ணீர் 500 மில்லி ரூ.22, 200 மில்லி ரூ.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அண்ணா சாலை, ஜார்ஜ்டவுன் ஆகிய 2 தபால் நிலையங்களில் இந்த தண்ணீர் விற்பனையாகிறது. இன்று காலை விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டன.இதேபோல் திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய 7 தலைமை தபால் அலுவலகங்களில் விற்பனைக்காக வந்துள்ளது.

கங்கை நீர் கிடைத்ததை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். கங்கைக்கு போக முடியாதவர்கள் தங்களது கனவு நிறைவேறி விட்டதாக சந்தோ‌ஷத்துடன் தெரிவித்தனர்.