January 31, 2023

ரோமில் நடந்த ஜி-20 மாநாட்டின் ஹைலைட்ஸ்!

புவியின் வெப்ப அளவு 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராமல் தடுப்பதற்கு நடப்பு நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று ஜி20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அத்துடன் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்சார நிலையங்களில் இனிமேல் முதலீடு செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். மாநாட்டின் இறுதியில் மாநாட்டுத் தலைவர் என்ற வகையில் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி மாநாட்டு முடிவுகளை வெளியிட்டார்.

ரோமில் நடந்த ஜி-20 மாநாட்டில் குறிப்பிடத்தக்க இலக்குகள் தீர்மானிக்கப்படாவிட்டாலும் அடுத்து கிளாஸ்கோவில் நடைபெற உள்ள சிஓபி 26 மாநாட்டில் திட்டமான இலக்குகள் நிர்ணயிக்கப்படும் என்று நம்புவதாக இத்தாலிய பிரதமர் டிராகி குறிப்பிட்டார்.

ரோமில் நடந்த ஜி-20 மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீன தலைவர்கள் பங்கு கொள்ளவில்லை. தனிநபரை பொருத்த அளவில் உயர்ந்தபட்ச அளவு கரியமில வாயுவை வெளியிடும் சீனாவின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கு கொள்ளாத நிலையில் குறிப்பிடத்தக்க இலக்குகள் வரையறைசெய்யப்படாமல்போனது ஆச்சரியமல்ல என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது

பருவநிலை வேறுபாட்டினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளின் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கும் ஈடு செய்வதற்கும் சுமார் 100 பில்லியன் டாலர் தொகையை வழங்க ஜி-20 தலைவர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. நிலக்கரி மின்சார நிலையங்களில் முதலீட்டை தவிர்க்க ஜி 20 அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்திருப்பது நிலக்கரியை பெருமளவில் பயன்படுத்தும் சீனா, ரஷ்யா, இந்தியாவுக்கு எச்சரிக்கை ஆகும் என்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே பல அரங்குகளில் எடுக்கப்பட்ட முடிவு ஒன்றை ஜி20 நாடுகளின் தலைவர்கள் அங்கீகரித்து ஒப்புதல் வழங்கியுள்ளனர். பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் மீது குறைந்தபட்ச அளவுக்கு 15 சதவீதம் வரி விதிக்கலாம் என்று என்ற முடிவை ஜி20 நாடுகளின் தலைவர்களும் ஒப்புதல் தந்து அங்கீகரித்துள்ளனர்.

இது உலக அளவில் வரித்துறையில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான சீர்திருத்தமாக கருதப்படுகிறது.

இந்த ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்களும் இத்தாலியின் நிதி மற்றும் சுகாதார அமைச்சர்களின் கூட்டு தலைமையின்கீழ் மாநாட்டுக்கு முன்னதாக கூடிப் பேசும் பொழுது நிதி மற்றும் சுகாதாரத் துறைக்கு என தனித்தனி பணி குழுக்களை நிரந்தரமாக நிறுவுவது என்றும் இந்த குழுக்கள் நிரந்தரமான அமைப்புக்களாக இயங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கு என அமைக்கப்பட்டுள்ள பணிக்குழு எதிர்காலத்தில் மற்றொரு மற்றொரு வைரஸ் தொற்று உலக அளவில் பரவ விடாமல் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது

மாநாட்டு அரங்குக்கு வெளியே ஆஸ்திரேலியாவின் நீர்மூழ்கி பிரச்சனை சூடாக விவாதிக்கப்பட்டது.

அது தவிர, அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் ஜான்சன், ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கெல், பிரான்ஸ் நாட்டின் இமானுவேல் மக்ரூன் ஆகியோர் ஈரான் அணுகுண்டு தயாரிக்க உதவும் கதிரியக்க பொருட்களை செழுமைப் படுத்துவதைத் தடை செய்யும் ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே ஈரான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அப்படியே ஈரானும் அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டால் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் இருதரப்பும் அமுல் செய்ய கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்று முறையான உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் துவங்குவதற்கு முன்னால் 20 நாடுகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் ரோமில் உள்ள டிரெவி நீரூற்றுக்கு சென்றனர். அங்கு நீரூற்றில் சுற்றுலா பயணிகள் நாணயங்களை சுண்டி வீசுவதுபோல ஜி20 நாடுகளின் தலைவர்களும் நாணயங்களை வீசி மகிழ்ந்தார்கள். காலையில் நடந்த இந்த நிகழ்வுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செல்லவில்லை.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் சிஓபி 26 மாநாடு இன்று திங்கட்கிழமை அன்று துவங்குகிறது. அதனால் ஜி 20 அமைப்பின் தலைவர்கள் அனைவரும் நேரடியாக ரோமில் இருந்து கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.