ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

ஆல் இண்டியா லெவலில் நடக்கும் நீட் தேர்வு & தமிழக மெடிக்கல் கவுன்சிலில் குளறுபடிகள் – முழுமையான அலசல்!

நீட் தேர்வு மற்றும் தமிழக மருத்துவ கலந்தாய்வு எவ்வாறு நடைபெறுகின்றன. அதில் தவறுகள் நடக்க எப்படியெல்லாம் வழிகள் இருக்கிறது என்பது குறித்த ஒரு முழுமையான விளக்கம்.


.
அரசு மருத்துவ கல்லூரிகள் உட்பட அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலே நிரப்பவேண்டுமென்று 2017 ல் நீட் கட்டாயமாகக்கப்பட்ட பிறகு 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் நீட் தேர்வை CBSE (CENTRAL BOARD OF SECONDARY EDUCATION) நடத்தியது. CBSE அந்த தேர்வை நடத்துவதால் தங்களது CBSE மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ இடங்களை கைப்பற்ற வேண்டுமென்ற விதத்தில் கேள்வி களை தயார் செய்வார்கள் என்ற ஆட்சேபணை எழுந்ததாலோ என்னவோ 2019 ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்வுகள் முகமை (NATIONAL TESTING AGENCY) மூலம் நீட், IIT க்கான JEE உள்ளிட்ட பல்வேறு தேர்வு களையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்து 2019 முதல் அந்த NTA அமைப்பே நீட் தேர்வையும் நடத்த துவங்கியிருக்கிறது.
.
இந்த நீட் தேர்வானது மாணவர்கள் நேரடியாக OMR SHEET ல் விடைகளை குறிப்பிடும் ஒரு தேர்வாக நடைபெறுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதில் துவங்கி அதில் திருத்தங் களுக்கான காலவரையறையை கொடுத்து, ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நாட்களை தந்து, தேர்வுகளுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்து, தேர்வை நடத்தி முடித்து, முடிவுகள் அறிவிக்கும் முன்பாக விடைகளை வெளியிட்டு அதில் தவறுகள் இருக்குமா னால் மார்க்குகளை கோர அனுமதி தந்து சரிபார்த்த பிறகு, தேர்வு முடிவுகளை தங்களது வலைத் தளத்தில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக அவரவருக்கான முடிவுகளை அவரவர் ரோல் நம்பரை கொடுத்து பார்க்கும் விதமாக வெளியிடுகிறது. இறுதியாக முடிவுகளை வெளியிட்ட பின்னர் ஒவ்வொரு மாநில வாரியாக மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலை மாணவர்களின் பெயர் மற்றும் மதிப்பெண்கள் மற்றும் அவரவர் சார்ந்த சமூக விவரங்களோடு சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி விடும். அதன் பிறகு மாநில அரசுகள் நடத்தும் மருத்துவ கலந்தாய்வுகளில் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமையின் (NTA)பங்களிப்பு என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
.
ஏனென்றால் மாநில வாரியான நீட் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தமிழக அரசு அதை தனது கைவசம் வைத்துக்கொண்டு அந்த ஆண்டுக்கான மருத்துவ கல்வி சேர்க்கைக்கு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒரு விண்ணப்பமும், சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு மற்றொரு விண்ணப்ப முமாக விண்ணப்பங்களை கோரி இரண்டுவிதமான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பை யடுத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் நடத்தும் கலந்தாய் வுக்கு அனுப்புவார்கள். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் முடிந்து சில நாட்களில் விண்ணப் பித்தவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் சார்ந்த சமூகத்தையும் குறிப்பிட்டு (BC, BCM, MBC, SC, ST, SCA) ஒட்டு மொத்த தரப்பட்டியலை வெளியிடுவார்கள். தரப் பட்டியல் வெளியிட்ட கையோடு மருத்துவ மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வுக்கான தேதிகளை குறிப்பிட்டு ஒரு அட்டவணையை வெளியிட்டு கலந்தாய்வை தொடங்குவார்கள்.
.
தமிழகத்தில் மருத்துவக்கல்வி இயக்ககம் 2018ம் ஆண்டு வரை அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட விண்ணப்ப பாரங்களை சென்னை மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும், மாநிலம் முழுவதுமுள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் நேரடியாக மாணவர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை இயக்ககம் நேரடியாகவும், தபால் மற்றும் கொரியர் மூலமும் பெற்று வந்தார்கள். நடப்பு 2019ம் ஆண்டு முதல் தமிழக மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்துவிட்டார்கள்.
.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய தேர்வுகள் முகமை (NATIONAL TESTING AGENCY) நீட் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது மற்றும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது துவங்கி இறுதியாக நீட் தேர்வு மதிப்பெண்கள் வெளியிட்டு மாநில அரசுகளிடம் ரேங்க் பட்டியலை ஒப்படைக்கும் வரை என்னென்ன விதிகள் கடைபிடிக்கப் படுகின்றன. NTAவின் நீட் ரேங்க் பட்டியலை பெற்றுக்கொண்ட பிறகு அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் மருத்துவ கலந்தாய்வில் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்டு விரும்பிய இடத்தை கேட்டு அரசு ஒதுக்கீடு செய்து பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் தாங்கள் கல்லூரிகளில் சேரும் போது என்னென்ன விதிமுறை களை கடைப்பிடிக்கவேண்டும் என்பது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டால் மட்டுமே பல்வேறு கட்டங்களை கொண்ட இந்த நீண்ட நெடிய வழிமுறைகளில் எங்கெங்கே எந்தெந்த வழிகளில் தவறுகள், முறைகேடுகள், ஊழல்கள் நடக்க வாய்ப்புகள் இருக்குமென்பது புரியும்.
.
CBSE யானாலும் சரி NTA வானாலும் சரி பொதுவாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டா வது வாரத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் ஞாயிற்று கிழமையன்று நடைபெறவிருக்கும் நீட் தேர்வு குறித்த ஒரு அறிவிப்பை அவர்களது வலைத்தளத்தில் வெளியிடும். அதோடு அந்த வலைத் தளத்தில் நீட் தேர்வுக்காகவென்றே பிரத்யேகமாக ஒரு லிங்க் இருக்கும். இந்த லிங்க் மூலமே மாணவர்கள் விண்ணப்பிக்க இயலும். அந்த லிங்கை க்ளிக் செய்து போகும் போது தேர்வுக்கான அறிவிப்புகளோடு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை கொண்ட சுமார் நூறு பக்கங்களை கொண்ட ஒரு தகவலறிக்கை (INFORMATION BULLETIN) இருக்கும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப் பவர்கள் அதை டவுன்லோட் செய்து விதிமுறைகளை பார்த்து புரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் NTA வலைத்தளைத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும், கையெழுத்திட்டு சமர்ப்பிக்கும் விண்ணப்ப முறையே நீட் தேர்வுக்கு கிடையாது.
.
தற்போது மருத்துவ கல்லூரிகளில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக வந்திருக்கும் செய்தி களை குறித்து தீர ஆராயும் போது 2018 வரை நீட் தேர்வை CBSE (CENTRAL BOARD OF SECONDRY EDUCATION) நடத்திய போது அந்த CBSE நீட் தேர்வெழுத விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை பதிவேற்ற CBSE வைத்திருந்த ஒரு சில கட்டுப் பாடுகள் மற்றும் விதிமுறைகளை தேசிய தேர்வுகள் முகமை வாரியம் (NATIONAL TESTING AGENCY) முதன்முறையாக நடப்பு ஆண்டு 2019ல் நீட் தேர்வை நடத்திய போது கைவிட்டுள்ளது.
.
அதாவது CBSE அமைப்பு தாங்கள் நீட் தேர்வை நடத்திய போது தேர்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் அந்தந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையே பதிவேற்றம் செய்ய வேண்டுமென்று விதிமுறை வைத்திருந்தார்கள். அதாவது வரும் 2020ம் ஆண்டு நீட் தேர்வெழுத ஒரு மாணவரோ மாணவியோ தற்போது விண்ணப்பித்தால் அவர் 2019 ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்ட கலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்ற வேண்டும். பழைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. மேலும் அந்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துக்கு கீழே மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்ற தேதியும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.
.
மேலே குறிப்பிட்டிருப்பதற்கு ஆதாரமாக 2018ம் ஆண்டு CBSE நடத்திய நீட் தேர்வுக்கான தகவல் குறிப்பேட்டின் 11ம் பக்கம் இதோ:


.
ஆனால் 2019ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (NATIONAL TESTING AGENCY) நீட் எழுதவிருக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் விண்ணப்பத்தோடு சமீபத்தில் எடுத்த வெள்ளை நிற பின்னணியுடன் கூடிய கலர் புகைப்படத்தை இணைக்க வேண்டுமென்று ஒற்றை வரியில் சொல்லிக்கொண்டதோடு நிறுத்திக்கொண்டது. புகைப்படத்தில் விண்ணப்ப தாரரின் பெயரை குறிப்பிடவேண்டுமேன்றோ, ஓராண்டுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டுமென்றோ, புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியை குறிப்பிடவேண்டுமேன்றோ எந்தவிதமான விதிமுறையையும் குறிப்பிடவில்லை.
.
இதற்கு ஆதாரமாக 2019ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (NATIONAL TESTING AGENCY) நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெளியிட்டிருந்த தகவல் குறிப்பேட்டின் (INFORMATION BULLETIN) 32 வது பக்கம் இதோ:


மேலும் தேசிய தேர்வுகள் முகமை (NATIONAL TESTING AGENCY) வெளியிட்டிருந்த தகவல் குறிப்பேட்டின் (INFORMATION BULLETIN) 36 வது பக்கத்தில் நீட் தேர்வுக்கும், மருத்துவ கலந்தாய்வுக்கும் மற்றும் கல்லூரியில் சேரும் போதும் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பிரதிகளையே சமர்ப்பிக்க வேண்டுமென்ற விதி ஒன்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 36வது பக்கத்தையும் இதோ:


இது ஒரு புறமிருக்கட்டும். அடுத்து தமிழக அரசின் சுகாதாரத்துறையின் மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தும் மருத்துவ கலந்தாய்வுக்கு வருவோம்.
.
கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தமிழக அரசின் சுகாதாரத்துறை மருத்துவ கலந்தாய்வுக்காக அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பும்படி தெரிவித்திருந்தது. அப்போது விண்ணப்பத்துடன் வழங்கிய தகவல் குறிப்பேட்டில் (PROSPECTUS) புகைப்படம் அந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும். மாணவரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்றும் தெளிவான விதிமுறையை வகுத்து அதற்கென்று ஒரு தனி பக்கத்தையே ஒதுக்கி விவரித்திருந்தார்கள்.
.
2018ம் ஆண்டு தமிழக சுகாதாரத்துறை நடத்திய கலந்தாய்வு விண்ணப்பத்திற்கான தகவல் குறிப்பேட்டின் (PROSPECTUS) 25ம் பக்கத்தை இத்தோடு இணைத்துள்ளேன் (ANNEXURE – I). அதில் புகைப்படம் 01 April 2018க்கு பிறகு எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்டு ள்ளதை காணலாம்.


.
ஆனால் நடப்பு 2019ம் ஆண்டில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் படி அறிவித்து ஆன்லைன் மூலமாகவே மாணவ மாணவிகளிடம் விண்ணப்பங்களை கோரியது. ஆனால் 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் நடைபெற்ற கலந்தாய்வுக்கு விண்ணப்பங்களை கோரிய போது விதித்திருந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு கலந்தாய்வை நடத்தியுள்ளார்கள். குறிப்பாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவியர் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும்படி ஒற்றை வரியில் தெரிவித்து விட்டு வேறு எந்த நிபந்தனையையும் கூறவில்லை. மாணவ மாணவியரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்ற எந்த விதியுமில்லை.
.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுத்திய அதே புகைப்படத்தைதான் பயன்படுத்த வேண்டுமென்று நீட் தேர்வை நடத்திய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ்வரும் தேசிய தேர்வுகள் முகமையின் (NATIONAL TESTING AGENCY) தகவல் குறிப்பேட்டிலும் (INFORMATION BULLETIN) குறிப்பிடவில்லை. அதேபோல தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட தகவல் குறிப்பேட்டிலும் (PROSPECTUS) அது போல் எந்த விதியையும் குறிப்பிடவில்லை. இதற்கு ஆதாரமாக 2019ம் ஆண்டு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப விதிமுறைகளின் (PROSPECTUS) 40வது பக்கத்தை இணைத்துள்ளேன்.


.
இந்த விதிமுறை கோளாறால் தற்போது ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளான சில மாணவர்கள் தாங்கள் நீட் தேர்வுக்காக தேசிய தேர்வுகள் முகமையின் (NATIONAL TESTING AGENCY) ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பழைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக CBICID விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு தப்பியுள்ளார்கள் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
.
இந்த நிபந்தனை தளர்வு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக கோவையின் பாரம்பரியமிக்க தனியார் மருத்துவ கல்லூரியில் ஆவணங்களை சரிபார்த்த நிர்வாகம் புதிதாக தங்களது கல்லூரியில் சேர்ந்துள்ள ஒரு மாணவி மற்றும் மாணவர் மீது ஆள் மாறாட்ட சந்தேக மிருப்பதாக கல்லூரி நிர்வாகம் தாங்களாகவே முன்வந்து புகார் கொடுத்ததாகவும்,, மாநில CBCID விசாரித்ததில் அந்த மாணவி தான் நீட் தேர்வுக்கு தேசிய தேர்வுகள் முகமையின் (NATIONAL TESTING AGENCY) வலைத்தளத்தில் விண்ணப்பித்த போது (+2 படித்த போது) பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்ததாகவும், அதனாலேயே தற்போது முக வித்தியாசமிருப்பதாகவும் தெரிவித்தாகவும், அதை மருத்துவக்கல்வி துறையும், CBCID யும் ஏற்றுக்கொண்டு விடுவித்துள்ளார்கள் என்றும் பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.
.
இது மிக எளிதாக தள்ளிவிட்டு போக வேண்டிய விவகாரமில்லை. இந்த விஷயத்தில் குழப்பமும் சந்தேகமும் அதிகரிக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ கல்வியில் சேர்ந்திருக்கும் மாணவ மாணவி கள் தமிழக அரசின் மாநில சுகாதாரத்துறையிடம் அவர்கள் நடத்திய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக் கும் போது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து அனுப்பிய புகைப்படம் மருத்துவ கல்வி இயக்ககம் வசமிருக்கும். கூடுதலாக கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தாங்கள் நீட் தேர்வு எழுதிய போது பயன்படுத்திய தேசிய தேர்வுகள் முகமை (NTA) வழங்கிய போட்டோ ஒட்டிய ஹால்டிக்கெட்டையும் சமர்பித்து நீட் எழுதியதும், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருப்பதும் தான்தான் என்று நிரூபிக்கும் விதமாக கொடுத்திருப்பார்கள். இந்த இரண்டு புகைப்படங்களும் வேறு வேறு விதமாக இருக்கும் பட்சத்தில் அதை ஏன் மருத்துவ கல்வி இயக்ககம் முறையாக ஒப்பீடு செய்து பார்க்கவில்லை?
.
இங்கே கலந்தாய்வில் ஒரு மாணவனோ மாணவியோ சமர்ப்பித்திருக்கும் புகைப்படம் நீட் தேர்வுக் கான புகைப்படத்திலிருந்து மாறியுள்ளது என்ற சந்தேகம் எழுமானால் அந்த சந்தேகத்தை உடனுக் குடன் மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகைமையின் வலைத்தளத்தில் (Website of NTA) சரி பார்த்து உறுதி செய்யும் அதிகாரம் ஏன் மாநில அரசின் சுகாதாரத்துறைக்கு இல்லை?
.
அதேபோல அதே கோவை தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகம் சந்தேகப்பட்ட மற்றொரு மாணவன் தான் ப்ளஸ் டூ தேர்வு முடிந்த பிறகு (மார்ச் 2019) உடல் எடைக்குறைப்புக்காக பேலியோ டயட் உணவு பயிற்சியை கடைபிடித்ததாகவும் அதனாலேயே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் போது முக அடையாளம் மாறியிருந்ததாகவும் கூறி அவரது கூற்றையும் CBCID ஏற்று விடுவித்துள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.. மூன்றே மாதங்களில் உடல் எடை குறையலாமே தவிர முக அடையாளமும் எப்படி மாறும் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருக்கிறது.
.
இந்த புகைப்பட விதிமுறை குழப்பம் ஒருபுறம் இருக்கிறது என்றாலும், மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு மாணவர்கள் தாங்கள் கலந்தாய்வில் பெற்ற எந்த கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என்ற ஒதுக்கீடு உத்தரவோடு (Allottment Order) அனைத்து ஆவணங்களையும் தேர்ந்தெடுத்துள்ள கல்லூரிகளில் சமர்பிக்கும் போது உடனடியாக அனைத்து ஆவணங்களையும் சரி பார்க்க இயலவில்லை என்றாலும் ஓரிரு நாட்களுக்குள் மாணவர் தங்களிடம் சமர்ப்பித்திருக்கும் புகைப்படத்தை நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாமா?
.
இறுதியாக மேலும் சில சந்தேகங்கள் இருக்கிறது
.
நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு ஆதார் வழங்கிவிட்டோம் என்று ஐ.நா வரை சென்று முழங்கும் பிரதமரின் அரசாங்கம் ஏன் நீட் போன்ற தகுதி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டுமென்று கட்டாயமாக்கவில்லை? ஆதார் அடிப்படையில் விண்ணப்பங்களை வாங்கும் போது ஒரு மாநிலத்தில் வெளிமாநில மாணவர்களின் ஊடுருவல் தடுக்கப்பட வாய்ப்பு உண்டுதானே?
.
நீட் தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிடுவதோடு தருவதோடு தேசிய தேர்வுகள் முகமையின் (NATIONAL TESTING AGENCY) பணி முடிந்து விடுகிறதா? தேர்வு பெற்ற மாணவர்களுக்குதான் அந்தந்த மாநிலங்களில் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வழக்கமே இல்லையா?
.
தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆண்டு தோறும் நடத்தும் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு சீட்டுகளை பெரும் மாணவர்கள் அடுத்த இரண்டே நாட்களுக்குள் (ஆர்டரை கையில் வாங்கிய மறுநாள் அல்லது அதற்கு மறுநாளைக்குள்) தத்தம் கல்லூரிகளில் சேர வேண்டுமென்று அவசரப்படுத்துவது ஏன்? இது கல்லூரியில் ஆவணங்களை சரிபார்த்து வாங்கும் அந்தந்த கல்லூரிகளின் நிர்வாக பணியாளர்களுக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டுமென்ற நிலையில் தவறுகள் நேர வழிவகுக்காதா?
.
தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே புறப்படும் மருத்துவ கல்லூரிகளின் ஆள் மாறாட்ட புகார்கள் மேலே கூறிய நிர்வாக ஓட்டைகளை பயன்படுத்தி நடைபெற்றவையா? அல்லது திட்டமிட்டே இது போன்ற ஓட்டைகளை ஏற்படுத்தி வைத்து முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? ஏனென்றால் அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டுக்கு அதிக பட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் மட்டுமே கல்வி கட்டணம். ஐந்தரை ஆண்டுகளுக்கு மொத்தமே ஒரு லட்சம் ரூபாய்க்குள்தான் கட்டணம் வரும். அதிலும் இறுதி ஆண்டில் ஸ்டைபென்ட் வேறு உண்டு. ஆனால் இன்றைக்கு தனியார் கல்லூரிகளில் மருத்துவ சீட்டு ஒன்று முதல் ஒன்றரை கோடி வரை விலை போகும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் பலரும் கூட்டாக திட்டமிட்டு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட உதவும் நீட் கோச்சிங் சென்டர்கள் மற்றும் தரகர்களிடம் இணைந்து கொண்டு கோடிக்கணக்கில் பணத்தை பெற்று அரசு இடங்களை வேண்டியவர்களுக்கு விற்றிருக்க கூடும் என்ற என்ற பலத்த சந்தேகம் பலருக்கும் வருவது இயல்பானதுதானே?
.
இப்போது வரை ஆள் மாறாட்ட புகாரில் கைதாகியிருக்கும் மாணவர்கள் பலரும் ஒரே பள்ளியில் அல்லது ஒரே நீட் பயிற்சி மையத்தில் ஒன்றாக பயின்றவர்கள் என்ற ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தவண்ணமிருக்கிறது. ஆனால் அந்த பயிற்சி மையத்தின் பெயர் என்ன? அதனை நடத்துபவர் யார்? என்ற விவரங்கள் வெளிவரவேயில்லை.
.
மோசடிக்கு துணை போன முகவர்கள் என்ற பெயரில் சிலரையும் கைது செய்து கணக்கு காட்டி வருகிறார்கள். அந்த முகவர்கள் யார் யார்? அவர்களது பின்னணி என்ன? அவர்களுக்கும் அந்த பயிற்சி மையத்திற்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டுள்ளது? என்பது போன்ற விவரங்களும் முழுமையாக மறைக்கப்பட்டு வருவதாக சந்தேகம் எழுகிறது.
.
இந்த ஆள் மாறாட்டம் இந்த ஆண்டு மட்டும்தான் நடந்துள்ளதா? கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் இப்படி ஆள்மாறாட்டம் செய்து சேர்ந்து படிப்பவர்கள் இருக்கிறார்களா? இதை எவ்வாறு விசாரிப்பது? ஏனென்றால் 2017ம் ஆண்டு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட வெளிமாநில மாணவ மாணவியர் தமிழக வருவாய்துறையினரிடம் போலி ஆவணங்களை கொடுத்து இரட்டை இருப்பிட சான்றிதழை பெற்று தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இடங்களை பெற்றதாக ஒரு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு பிறகு இப்போது ஆள் மாறாட்டம் என்ற புதுவிதமான மோசடி நடைபெற்றுள்ளதாக வரும் தகவல்கள் நல்லதுதானா?
.
நீட் தேர்வே வேண்டாமென்பது தமிழகத்தில் பெரும்பான்மையோரின் நிலைப்பாடு என்றாலும் கூட மருத்துவம் பயில நீட் எழுதியே தீரவேண்டுமென்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் கடுமையான முயற்சி எடுத்து பெருத்த மன உளைச்சலோடு பயின்று வரும் தமிழக மாணவ மாணவியரின் உழைப்பு தொடர்ந்து மோசடிப்பேர்வழிகளால் சுரண்டப்படுவது தவறல்லவா?
.
வாரிசுகளை தனியார் கல்லூரிகள் மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து படிக்க வைக்குமளவுக்கு வசதி மிகுந்த ஒரு சில டாக்டர்கள் கூட குறைந்த கட்டணத்தை மனதிற்கொண்டு இது போன்ற கீழ்த் தரமான காரியங்களில் ஈடுபட்டு சிக்கியிருப்பது அருவருக்கத்தக்கது. இவர்களது வாரிசுகள் சிக்கிகொண்டதால் அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாகும் இடம் முறையான ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ கிடைக்காமல் வீணாகும்படி செயல்பட்டிருப்பது அயோக்கியத்தனமானது.
.
தமிழக சுகாதாரத்துறை இனியாவது தவறுகளை களைந்து முறையாக கலந்தாய்வை நடத்த முயற்சி செய்ய வேண்டும்.. அதைவிட மிக முக்கியமாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அடுத்து ஒருவர் இது போன்ற தவறுகளை செய்யும் எண்ணமே வராதவாறு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும்.
.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் உடனடியாக இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து செயல்படுவது மிக மிக அவசர அவசியமானது.

நெல்லை ராதாகிருஷ்ணன்

Related Posts

error: Content is protected !!