பெட்ரோல்,டீசல் விலை கூடுவதும் அதே சமயம் குறையாததும் ஏன்?

பெட்ரோல்,டீசல்  விலை கூடுவதும் அதே சமயம் குறையாததும் ஏன்?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்ப் பொருட்களின் விலை உயரும்போது, இந்தியாவிலும் அது எதிரொலிக்கிறது. ஆனால், சர்வதேசச் சந்தையில் அதன் விலை குறையும்போது ஏன் இந்தியாவில் அது பெரிய அளவில் எதிரொலிப்பதில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இந்தச் சூழலில் இதற்கு மத்திய பெட்ரோலிய, இயற்கை நிலவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வினோதமான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலைச் சரிவு என்பது சர்வதேசச் சந்தையில் எப்போதுவேண்டுமானாலும் தலைகீழாக மாறக்கூடும்; விலை திடீரென்று கடுமையாக உயர்ந்தால் மக்களால் அதை எதிர்கொள்ள முடியாது என்பதால்தான் வரி விதிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

petrol may 10

ஜூலை 2014 முதல் மார்ச் 2016 வரையிலான 21 மாதங்களில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் 65% சரிந்திருக்கிறது. இக்காலத்தில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் விலையோ 15% மட்டுமே சரிந்திருக்கிறது. விலை அதிகரிப்புக்கு மத்திய அரசின் உற்பத்தி வரித் தீர்வையும் மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியும் முக்கியக் காரணங்கள்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் பெட்ரோல், டீசலுக்கு அரசே விலை நிர்ணயிக்கும் வழியைக் கைவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சர்வதேசச் சந்தையில் விலை குறையும்போது அதன் பலன் நுகர்வோர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது என்றும் இத்துறையில் தனியார் முதலீடு செய்து தங்களுக்குள் போட்டியிட்டால் விலை குறையும் என்றும் விளக்கம் சொல்லப்பட்டது.

அரசுத் துறையில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசு ஈடுகட்ட வேண்டிய நிலை உருவானது. இந்தச் சூழலில், 2014 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் மீதான விலைக் கட்டுப்பாட்டை முழுவதுமாக நீக்கியது.

இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு புறம் மானியச் செலவு குறைந்தது, இன்னொரு பக்கம் உற்பத்தி வரி உயர்வு மூலம் வருவாயும் வந்தது. சமையல் எரிவாயு மானியத்தைப் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் அளிப்பதாலும் தாங்களாகவே முன்வந்து மானியத்தை விட்டுத்தருமாறு கோரியதாலும்கூட மானியச் செலவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சரிகட்ட முயலும் அரசின் முயற்சியைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் இதுவும் மறைமுகமாக அரசே விலையை நிர்ணயிப்பதாகத்தானே இருக்கிறது?

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ஜூன் 2014-ல் 7.31% ஆக இருந்தது மார்ச் 2016-ல் 4.83% ஆகக் குறைந்ததை அரசு சுட்டிக்காட்டுகிறது. ஆனால் உணவுப் பொருட்களுக்கான குறியீட்டெண் மார்ச் மாதம் 5.21% ஆக மட்டுமே குறைந்தது. இதற்குக் காரணம் உணவுப் பொருட்கள் லாரி, சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதுதான். டீசல் விலையை அரசு குறைத்திருந்தால் இந்தக் குறியீட்டெண்ணும் குறைந்திருக்கும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் சூழலில், சாக்குப்போக்குகளையும், வெற்றுக் காரணங்களையும் கூறிக்கொண்டிருக்காமல் சர்வதேசச் சந்தையில் விலை குறையும்போது அதற்கான பலன் மக்களைச் சென்றடையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு என்பதன் அர்த்தம் அதுதான்!

Related Posts

error: Content is protected !!