டீசல் டோர் டெலிவரி – சென்னையில் தொடங்கிடுச்சு!

டீசல் டோர் டெலிவரி – சென்னையில் தொடங்கிடுச்சு!

பெரும்பாலான பெட்ரோல் பங்க்-குகளில் எப்போது போனாலும் நாலைந்து பேர் காத்து நிற்கும் சூழலில் முதல் முறையாக வீட்டு வாசலுக்கே வந்து டீசல் விற்பனை செய்யும் திட்டதை இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று சென்னையில் தொடங்கி விட்டது.

இந்தியாவில் முதல்முறையாக வீட்டு வாசலுக்கே வந்து எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை புனே மற்றும் மகாராஷ்ட்ராவில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த மார்ச்சில் தொடங்கியது. இதையடுத்து போட்டி நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் மும்பை நகரில் எரிபொருள் டெலிவரி செய்யும் திட்டத்தினை தொடங்கியது. இந்த திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திட்டத்தினை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தது.

இதையடுத்து தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சோதனை முயற்சியாக இத்திட்டத்தினை இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக 6,000 லிட்டர் கொள்ளளவுடன், மொபைல் டிஸ்பென்சருடன் கூடிய தீப்பற்றாத இன்ஸு லேட்டட் டேங்கர் லாரிகளில் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. குறைந்த பட்சமாக 200 லிட்டர்கள் முதல் ஆர்டர் கொடுக்கலாம், 2,500 லிட்டர்களுக்கு மேல் ஆர்டர் கொடுப்பவர்கள், எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் வசதிக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். Repose என்ற விஷேச mobile app மூலம் இந்த ஆர்டர்களை கொடுக்கலாம் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு இந்த திட்டத்தின் கீழ் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. பெட்ரோல் விரைவில் ஆவியாகும் தன்மை கொண்டதால் தற்போதைக்கு பெட்ரோல் இத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அதிகளவில் டீசல் பயன்பாட்டினை கொண்டிருக்கும் தொழில்துறை வாடிக்கையாளர் களுக்கானது என்றும் தனி நபர் வாகனங்களுக்காக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்து பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்பட வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!