இனி இந்திய ஆடவர் அணிக்கும், மகளிர் அணிக்கும் ஒரே அளவிலான சம்பளம்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு கவுன்சில் (பிசிசிஐ), இந்திய கிரிக்கெட்டையே மாற்றும் அளவிற்கான மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆடவர் அணிக்கும், மகளிர் அணிக்குமான ஒப்பந்த அடிப்படையில் போடப்படும் ஆட்ட தொகை என்பது ஒரே அளவில் வழங்கப்படும் என அறிவித்துள்ள விஷயம் பல தரப்பிலும் பாராட்டை பெற்று வருகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கக் கூடிய ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். என்ன தான் நாட்டிற்குள் ஆயிரம் பேதங்களும், சண்டை சச்சரவுகளும் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேருவது என்னவோ கிரிக்கெட்டுக்காகத் தான். ஆண்கள் மட்டுமே விளையாடி வந்த இந்த விளையாட்டை பெண்களும் விளையாடத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெண்களின் கிரிக்கெட் போட்டிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்களின் கிரிக்கெட் போட்டிக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கின்றதோ அதே அளவு பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பெண்களும் இந்த விளையாட்டில் பல மைல்கற்களை எட்டுவது தான். இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எட்டாத சாதனைகளையும் பெண்கள் எட்டியிருப்பதால், இப்போது கிரிக்கெட் ஆண், பெண் என்றில்லாமல் பொதுவாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐயின் செயலாளர் அறிவித்திருக்கும் அறிவிப்பு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினரை உற்சாகமடைய வைத்திருக்கிறது. அதாவது, ”பாலினப் பாகுபாட்டைக் களையும் விதமாக பிசிசிஐ எடுத்துள்ள முதல் அடி இது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள வீராங்கனைகள் அனைவருக்கும் சம ஊதிய கொள்கையை செயல்படுத்துகிறோம். பாலின சமத்துவத்தை நோக்கிய இந்திய கிரிக்கெட்டின் நகர்வு இது.
அதாவது இனி ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளுக்கு ரூ.15லட்சம், ஒருநாள் போட்டிகளுக்கு ரூ.6லட்சம் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரூ.3லட்சம் சம்பளமாக வழங்கப்படும். என பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார். இவரது இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.