October 26, 2021

ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம்!

டிஜிட்டல் சேவையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று(சனிக்கிழமை) ஓர் அறிவிப்புவெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

2017, டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு (Mand N ) 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1 ஆம் தேதி முதல் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்படுகிறது.

மத்தியமோட்டார் வாகன விதிகள் 1989-ன்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே பாஸ்ட் டேக் எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ்(பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்ட் டேக் வைத்திருக்க வேண்டும். பாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும்.

2019, அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து நேஷனல் பெர்மிட் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காப்பீடுச் சட்டத்தில் திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்ட் டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது, பாஸ்ட் டேக் அடையாள எண்ணை அளிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை மட்டும் 2021, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 சதவிகிதம் சுங்கக் கட்டணம் டிஜிட்டலில் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு எளிதாக பாஸ்ட் டேக் கிடைக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அடுத்த இரு மாதங்களுக்குள் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பாஸ்ட் டேக் அட்டையை வாகனத்தில் ஒட்டிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.