December 6, 2022

கருத்துச் சுதந்திரமும், காயச் சுதந்திரமும்! – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

கருத்துச் சுதந்திரத்தைப் போற்றிக்காப்பது அடிப்படை ஜனநாயக அம்சங்களில் ஒன்று. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். ஆனால், அதே கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்படி நடந்து கொண்டால் ஜனநாயக உரிமைகளுக்கு வரைமுறைகள் கொண்டு வரப்படும். இல்லையென்றால் இரண்டுமே வாழாது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெறும் சடங்கு போன்ற நிகழ்வு ஒன்றிற்காக அதுவும் தனது தேர்தல் தோல்வியை உறுதிப் படுத்தும் நிகழ்வைக் குலைக்க கருத்துச் சுதந்திரத்தை பணயமாகப் பயன் படுத்தியதோடு அல்லாமல் தனது கருத்துச் சுதந்திரத்தை சமூக வலைத்தளங்கள் தடுப்பதாகப் புகாரும் கூறினார். விளைவு டிவிட்டர் நிரந்தரமாக அவரது அதிபர் கணக்கு, தனிப்பட்டக் கணக்கு, அவரது அணியினரின் கணக்கு என எல்லாவற்றையும் முடக்கி விட்டது. பெரும் செல்வந்தரான டிரம்ப் தானும் ஒரு சமூக வலைத்தளம் துவங்கப்போவதாக அறிவித்து உள்ளார். இனிமேல்தான் விளையாட்டே இருக்கிறது.

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏகப்பட்ட தாராளமுண்டு. ஆனால் அதுவே வெறுப்புப் பேச்சாக இருக்கக்கூடாது என்பதுதான் முதல் நிபந்தனை. டிரம்ப் தனியாக சமூக வலைத்தளம் துவங்கினால் அதில் பைடன் அரசுக்கு தலைவலி தருவது போலும், சமூக நல்லமைதியைக் கெடுப்பது போன்றும் கருத்துக்களை இடம் பெறச் செய்தால் அப்போது என்ன நடக்கும் என்பதைச் சட்ட வல்லுநர்களே கூற முடியும்.

டிரம்ப் ஒரு பக்கம் என்றால் கார்ப்பரேட் மீடியாக்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து மனித சமூகத்திற்குத் தேவையானச் செய்திகளை வெளியிடு வதையும், வணிக நோக்கில் சம்ரசங்களைச் செய்துக் கொண்டு, பெய்ட் நியூஸ் போன்றவற்றை வெளியிடுவதும் கருத்துச் சுதந்திரத்தை மடைமாற்றும் செயல்கள் என்றே இதுவரை குற்றஞ் சாட்டப்பட்டு வருகிறது. உள்ளூரில் ஊழல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர் களுக்கு எதிராக எழுதினால் உயிருக்கு உறுதியில்லை எனும் நிலையிலேயே பத்திரிகை யாளர்கள் இருக்கின்றனர்.

இது பரந்து விரிந்து ஒவ்வொரு அளவுகோளில் நாட்டின் உயர் பதவியில் இருப்போர் வரை தொடர்கிறது. ஜனநாயக உரிமைகளைக் காப்பதாகச் சொல்லி அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பலியிடுவது மேல் மரத்தில் அமர்ந்துக் கொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது என்பதை பல நேரங்களில் உயர் பதவியிலுள்ளோர் மறக்கின்றனர். அமைப்பைச் சிதைத்தப் பின்னர் யாருக்காக பதவியும், அலங்காரமும்? டிரம்ப்பின் செயல் பாட்டை கண்டிக்கும் போது நாம் நம்மைச் சுற்றி இருப்பதையும் காண வேண்டியுள்ளது.

தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொது வாழ்க்கைக்கு பெண்கள் வருவது தவிர்க்க இயலாத செயலாக சூழல் நிர்ப்பந்தம் நிலவும் காலத்தில் பெண்களை ஊக்குவிக்காவிட்டாலும், காயப்படுத்தும் விதமாகப் பேசுவது வழமையாகக்கூடாதல்லவா? கமலா ஹாரிஸ் குறித்தும் டிரம்ப் இப்படி பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கருத்துச் சுதந்திரம் காயப்படுத்தும் சுதந்திரம் அல்லவே? பெண்களை வணிகப்பண்டங்களாக ஆக்கும் திரைத்துறையினர் அரசியலுக்கு வரும் நேரத்தில் பெண்களுக்கான கருத்துச் சுதந்திரமும் தாக்குதலுக்கு உள்ளாவது போகாத ஊருக்கு வழி சொல்வது போலுள்ளது. தேசிய மகளிர் ஆணையத் தலைவி தனது சொந்த நம்பிக்கைகளை சட்டங்களாக கருதுவதும் கண்டிக்கப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறது. இது போன்ற முரண்பாடுகளே கருத்துச் சுதந்திர மீறல்களுக்கு இடம் கொடுக்கின்றனவோ எனும் ஐயம் எழுவது தவிர்க்க இயலாதது.

அனைத்து வகையான கருத்துச் சுதந்திரங்களும் சுயப்பரிசோதனைக்கு உட்பட்டதே. தெரிந்தே பேசுவதுதான் அதிகார, ஆணவத்தின் உச்சம். இதுதான் உடனடியாக தடுக்கப்பட வேண்டியது. அறியாமையினால் பேசுவதைப் பின்னர் சரி செய்ய வேண்டும். கருத்துச் சுதந்திரம் கனது கண்ணியத்திற்கான சுதந்திரம் என்பதை அனைவரும் உணர வேண்டும். கண்ணியம் காயப்படுத்தாது அல்லவா?