February 4, 2023

இது ‘எல்ஸீ’ அரண்மனைக்கான போர்! -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

பிரான்ஸ் தேசத்திற்கு உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடமுண்டு. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு நவீன கால வரலாற்றை மாற்றியமைக்கும் பல நிகழ்வுகள் பிரெஞ்சு தேசத்திலேயே நிகழ்ந்தது. குறிப்பாக குடியரசு என்பது முடியாட்சியின் வீழ்ச்சியில் துவங்கும் என்பதை பிரெஞ்சு மக்களே உணர்த்தினர். அமெரிக்காவின் விடுதலைக்கு பிரெஞ்சு தேசம் கைகொடுத்ததும், இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரி இந்திய விடுதலைப் போருக்கு ஆதரவளித்ததையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் கீழ் சேர்க்கலாம். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரெஞ்சும் ஐரோப்பாவின் முன்னணி பொருளாதாரமாக மாறியதோடு, வல்லாதிக்கத்திற்கு துணைபோகும் போக்கையும் ஆதரிக்க வேண்டியிருந்தது. இன்று பிரான்ஸ் ஒரு முக்கிய மாற்றத்திற்காக காத்திருக்கிறது. அதிபர் தேர்தலில் வலது-மிதவாதிக்கும், தீவிர வலதுசாரிக்கும் இடையில் கடும் போட்டியை கண்டுள்ளது. புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதிகார பீடமான ‘எல்ஸீ’ அரண்மனை இன்னும் அரசியல் போர்களை காண வேண்டியுள்ளது.

தற்போதைய அதிபர் மெக்ரான் 2017 ஆம் ஆண்டில் முதல் முறையாக அதிபரானார். இப்போது மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வலதுசாரி என்றாலும் இனவெறியாளர் அல்ல. அவரை எதிர்த்து போட்டியிடும் மரின் லீ பென் தீவிர வலதுசாரி மற்றும் நிறவெறிக் கொள்கையுடையவர். வெளிநாட்டினருக்கு பிரான்ஸ்சில் இடமில்லை என்பவர். மேலும் அவர் பழைய நாஜியக் கொள்கையின் வாரிசாக கருதப்படுகிறார். அவரது தந்தை லீ பென் 1990 ஆம் ஆண்டுகளில் பிரபலத் தலைவராக விளங்கிவந்தார். அவருக்குப் பிறகு மேரி கட்சித் தலைவராக உயர்ந்தார். பிரான்சில் தீவிர வலதுசாரிகள் பலருண்டு. இப்போதைய தேர்தலின் முதல் சுற்றில் அதிபர் மெக்ரானிற்கு எதிராக 11 பேர் போட்டியிட்டனர். இதில் 6 இடதுசாரிகளும், 3 வலதுசாரிகளும் அடங்குவர். மரினைத் தவிர எரிக் ஸெம்மர் எனும் வலதுசாரியும் அதிக ஆதரவு பெற்றிருந்தார். இரண்டாம் சுற்றுக்கு மெக்ரானும், மரினும் தகுதி பெற்ற பிறகு ஸெம்மர் தனது ஆதரவாளர்களை மரினுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் மெக்ரானின் நிலையோ சற்று தடுமாற்றம். ஏனெனில் அவர் நடுவாந்திர-வலதுசாரி எனும் நிலையிலிருந்து வலதுசாரி என்ற நிலைக்கு தன்னை நகர்த்திக்கொண்டு போய்விட்டார். முதல் சுற்றில் போட்டியிட்ட இடதுசாரிகளுக்கு இப்போது நேரடியாக மெக்ரானுக்கு ஆதரவளிப்பது சற்று சிக்கல். எனவே அவர்கள் வாக்களிக்கவே வரமாட்டார்கள் எனலாம்.

மேலும் மூத்த குடிமக்கள், இளைஞர்களிடையே வாக்களிப்பதில் விருப்பமின்மை அதிகம் காணப்படுகிறது. கடந்த தேர்தலின் போதும் மக்களிடையே அதிக ஆர்வமின்மை காணப்பட்டது. பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு குறைந்த ஆர்வம் என்பது பழகிப்போன ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் குறைந்த வாக்குப்பதிவு என்பது சில நேரங்களில் நிகழ்கிறது. சென்ற தேர்தலில் 60-70% வரை வாக்குப்பதிவு இருந்தது. இதுவே வரலாற்றில் குறைந்த வாக்குப்பதிவு என்றனர். இப்போது இது மேலும் குறையும் என்கின்றனர். இது தேர்தல் முடிவை பாதிக்காது என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

சென்ற முறை மெக்ரான், மரினைவிட இருமடங்கு வாக்குகள் பெற்று வென்றார். இப்போதும் அதே போல வெல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது. இறுதி நிலவரப்படி மெக்ரான் 58.55% வாக்குகளையும், மரின் லீ பென் 41.45% வாக்குகளையும் பெற்றுள்ளனர். எனவே மெக்ரான் தொடர்ந்து இரண்டாம் முறையாக அதிபரானார். சுமார் 20 ஆண்டுகள் கடந்து இப்போதுதான் அதிபர் ஒருவர் இரண்டாம் முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவது நிகழ்ந்துள்ளது. இரண்டாம் சுற்றில் சுமார் 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குச் சீட்டுக்களை வெறுமையாக, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பெட்டியில் போட்டுள்ளனர். இது இரண்டு வேட்பாளர்கள் மீதும் அதிருப்தி இருக்கும் நிலையையே காட்டுகிறது. இவர்கள் பெரும்பாலும் முதல் சுற்றில் இடதுசாரி வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களாக இருக்கலாம்.

இத்தேர்தலில் நிகழ்ந்துள்ள முக்கிய மாற்றம் தீவிர வலதுசாரி வேட்பாளர் மரின் 40% ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாகும். மெரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வரி வெட்டுக்களையும், இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் ஜிஜாப் அணிவதை தடைச் செய்வதையும், அகதிகளின் வருகையைத் தடுக்க பொது வாக்கெடுப்பு நடத்துவதையும் முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு கிடைத்துள்ள ஆதரவு இதுவரை இல்லாதது என்பதால் மெக்ரான் பிளவுபட்டுள்ள பிரான்சை ஒற்றுமைப்படுத்துவதே தனது முதல் வேலை என்றார். மெரின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் வெளியேற வாக்குறுதி அளித்திருந்தார். அவரது தோல்வியால் ஐரோப்பிய நாடுகள் மகிழ்ச்சியடைந்துள்ளன. ஜெர்மனியும், பிரான்சுமே ஐரோப்பிய ஒன்றியத்தின் இஞ்சின்கள் என்பார்கள். ஒரு இஞ்சின் பறிபோவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே மெக்ரான் மட்டுமல்ல பிற 27 ஐரோப்பிய நாடுகளிலும் தீவிர வலதுசாரி எழுச்சி இப்போதைக்கு பேரளவில் நிகழாது என்று அந்நாட்டின் தலைவர்கள் கருதுவார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தையும் மெக்ரான் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

இத்தேர்தலோடு பிரான்சின் அரசியல் போட்டி முடிவிற்கு வரவில்லை என்கின்றனர். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை மெக்ரான் கட்சி இழக்கும் என்றும் கூறப்படுகிறது. இடதுசாரிகள் அதிக உறுப்பினர்களைப் பெற்று பிரதமர் பதவியையும் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் மரினிடம் சொற்ப வாக்குகள் வேறுபாட்டில் இரண்டாம் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இடதுசாரி வேட்பாளர் மெலஞ்சன் பிரதமர் ஆவேன் என்று அடித்துச் சொல்கிறார். எனவே ‘எல்ஸீ’க்கான போர் இன்னும் முழுமையாக முடியவில்லை.

ரமேஷ் பாபு