December 1, 2021

எகிறிய பெட்ரோல் விலை: வெகுண்டெழுந்த மக்கள்! – அவசர நிலை பிரகடனம்- பிரான்ஸ் நிலவரம்!

பிரான்ஸ் அரசு அறிவித்த பெட்ரோல் டீசல் விலையுயர்வை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக இலட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மஞ்சள் ஆடை போராட்டம் என்று அழைக்கப்படும் இப்போராட்டங்களின் போது காவல்துறையுடன் ஏற்பட்ட மோதலில் நூற்றுக் கணக்கில் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும் போராட்டத்தில் பங்கு பெற்ற ஒருவர் சாலை விபத்து ஒன்றில் பலியானார். நாடு முழுவதும் 2,000 இடங்களுக்கு மேல் சாலைகளையும் சாலை சந்திப்புகளையும் மறித்து நடந்த இப்போராட்டங்களையடுத்து அவசர நிலை பிரகனப்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதிக்கப் பட்டது. இதனால் பெட்ரால் மற்றும் டீசல் விலை அந்நாட்டில் கடுமையாக உயர்ந்தது. பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த 2000மாவது ஆண்டுக்கு பிறகு பிரான்ஸில் பெட்ரால், டீசல் விலை இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலை தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடடிக்கை எடுக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு கூறுகிறது. இதன் காரணமாகவே, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இது 2019-ம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப் படியான வரி விதிக்கப்படுவதாக அதிபர் மக்ரோன் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி மின் கட்டணத் தையும் உயர்த்த பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது. இந்த விலை உயர்வுக்கு எதிராக ஒளிரும் மஞ்சள் ஆடைகளை அணிந்து கொண்டு சாலைகளையும் நெடுஞ்சாலை களையும் முற்றுகையிட்டு போராட வருமாறு கடந்த மாதம் சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப் பட்டது. பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 1600 இடங்களில் போராட்டங்கள் நீடித்து வந்த நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள சாம்ஸ் எலிசீஸ் பகுதியில், பொதுமக்கள் கூடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்கார்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதில் 20 போலீஸார் உள்பட 110 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. கலவரக்காரர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், போலீஸார் கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் அவசரநிலை பிறப்பிக்க, பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.