April 2, 2023

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் காலமானார்!

பத்திரிகையாளர்,தொழிற் சங்கவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், விவசாயி என பன்முகவங்களை கொண்ட முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்(88) உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 7 மணிக்கு ஜார்ஜ் பெர்னான்டஸ் உயிர் பிரிந்துள்ளது. ஜார்ஜ் பெர்னான்டஸ் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1930 ஜூன் மாதம் 3-ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னான்டஸ், அரசியலில் நுழைந்து 1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றார். 1974ஆம் ஆண்டில் ரயில்வே ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னான்டஸ் பதவி வகித்தார். 2001 முதல் 2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார். 1998 முதல் 2004 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் 1989 முதல் 1990 வரை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்துள்ளார். 2010-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே 1976-ம் ஆண்டு அவசர நிலை காலத்தில் பரோடா வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்தார். அவசர நிலைக்குப்பின்னர்தான் 1977-ம் ஆண்டு மத்திய தொழில்துறை அமைச்சரானார். இந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் எடுத்த நடவடிக்கையால் 1977ல் கோக்கோ கோலா நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. கொங்கன் ரயில்வே திட்டம் அமைய காரணமாக இருந்தவர். பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்ற முடிவை வெளிப்படையாக ஆதரித்தவர்.ஜார்ஜ் பெர்னான்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடைபெற்றது

குறிப்பாக விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தோழமையான மனிதராக இருந்தவர். அத்துடன் தனி ஈழம் அமைய வேண்டும் என பேசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.