ஒரே மேடையில் ஐந்து முன்னாள் அதிபர்கள்; புயல் நிவாரண நிதிக்காக பங்கேற்பு:
அமெரிக்காவை ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகள் கடுமையாக தாக்கின. கடந்த ஆகஸ்டு மாதம், ஹார்வி சூறாவளியால் பில்லியன் கணக்கான டாலர்கள் அளவில் பொருள் சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தாக்கிய இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த இயற்கை பேரிடரில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் நிலைக்குலைந்தன.
அமெரிக்காவையே புரட்டிப்போட்ட இந்த சூறாவளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட ‘தி ஒன் அமெரிக்கன் அப்பீல்’ என்ற கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முன்னாள் அதிபர்கள் ஐந்து பேர் கலந்துகொண்டனர்.
டெக்சஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்துக்காக ஐந்து முன்னாள் அதிபர்களும் மேடையில் ஒன்றாக தோன்றினர். ‘அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்வோம்’ என்ற லீ கிரீண் உட்டின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.
நிகழ்ச்சியில் பிரபல பாடகி லேடி காகாவும் பங்கேற்று பாடினார். இதுவரை இந்த நிகழ்ச்சி மூலம் 31 மில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் சிறப்பான பணியைப் பாராட்டியும், தனது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார்.