January 31, 2023

தமிழகத்தின் புதுக் கவர்னர் ஆர்.என்.ரவி : யார்? எப்படி- முழு விபரம்!

மிழ்நாட்டின் புதிய கவர்னராக நாகாலாந்து மாநில கவர்னராக இருக்கும், ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் கவர்னராக பணியாற்றி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் பகுதி நேர கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல தமிழ்நாட்டின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தின் புதுக் கவர்னராக வரப் போகும் ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி என முழுப்பெயர் கொண்ட ஆர்.என்.ரவி, பிகார் மாநிலம் பாட்னாவை பூர்வீகமாக கொண்டவராவார். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கேரள காவல்துறையில் 1976 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.இதனையடுத்து மத்திய புலனாய்வு துறையில் பணியாற்றிய இவர், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதே போல எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்து அரசின் பல திட்டங்களுக்கு அடித்தளமிட்டுள்ளார்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி, கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிகையாளர் ஆகவே ஆசைப்பட்டார். சில மாதங்கள் அப்படிப் பணியாற்றியவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார் காஷ்மீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கையாளும் அதிகாரியாக ஐ.பி-யில் அவர் இருந்தார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் ரவிக்கு வசந்த காலம் ஆரம்பித்தது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பேற்ற அஜித் தோவல், தனது நம்பிக்கைக்குரிய ரவியை அழைத்துக் கொண்டார். உளவுத்துறைக்கான பிரதமர் அலுவலகத்தின் கூட்டுக் கமிட்டியின் தலைவராக ரவி நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் நாகாலாந்து பிரச்னையைத் தீர்க்கும் எண்ணம் மோடிக்கு வந்தது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் நாகாலாந்திலும், மணிப்பூர், அசாம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனி நாகாலாந்து உருவாக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்கள் பலவும் தனி அரசாங்கமே இப்போதும் நடத்துகின்றன. வரி வசூலிப்பது உட்பட அரசு செய்ய வேண்டிய பல வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். வடகிழக்கில் மற்ற மாநிலங்களில் அமைதி திரும்பிவிட்டாலும், நாகாலாந்து மட்டும் இன்னமும் கொந்தளிப்பாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையைத் தீர்க்க  அப்போது ஆர்வம் காட்டினார் மோடி. அப்போது அஜித் தோவல் சிபாரிசில் இந்த ரவியை நாகாலாந்து குழுக்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். போய் அடுத்தடுத்து சளைக்காமல் ஒரு வருசம் பேச்சு வார்த்தை மேல் பேச்சுவார்த்தைகள் நடத்தி, முய்வா என்பவர் நடத்திவரும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் (என்.எஸ்.சி.என்) ஒப்பந்தம் போட்டார். மோடி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், வடகிழக்கில் நிரந்தர அமைதியைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரவி ஒட்டுமொத்த போராட்டத்தை ஒடுக்க நினைப்பதாகவும் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால் பெரும்பாலான குழுக்களை உள்ளடக்கிய அமைப்பான NSCN – IM உடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மற்ற யாரும் தம்முடன் பேசவில்லை என்று ரவி பதிலளித்தார். இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு நாகாலாந்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதன் பிறகு 2017ம் ஆண்டில் இன்னும் சில அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரவி. இதைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவியும் ரவிக்குக் கிடைத்தது. 2019 ஆகஸ்ட்டில் நாகாலாந்துக்கு கவர்னராகவே நியமிக்கப்பட்டார். தற்போது ரவி தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நிலவளம் ரெங்கராஜன்