ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூர் என்ற கிராமத்தில் பிறந்த பல்பீர் சிங் இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீரர் என அறியப்படுபவர். இவர் முதன்முதலாக 1963ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டார். 1966ஆம் ஆண்டு பாங்காக்-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் பல்பீர் சிங் இடம் பெற்றிருந்தார்.

மேலும் 1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பெல்ஜியம், கிழக்கு ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று விளையாடி ஹாக்கியில் தனது திறமையை நிலைநாட்டியவர் பல்பீர் சிங்.

அதனைத் தொடர்ந்து 1968 முதல் 1975 வரை அகில இந்திய காவல்துறை அணியில் இடம்பெற்றிருந்த பல்பீர் சிங், அணியின் கேப்டனாகவும் இருந்தார். 1981ஆம் ஆண்டு பஞ்சாப் காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த இவர், 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஐஜியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார் பல்பீர் சிங் குல்லார். 1999ஆம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். இவரது மறைவுக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.