January 27, 2023

ஐஏஎஸ் முன்னாள் அதிகாரி சசிகாந்த் செந்தில் இன்று காங்கிரஸில் இணைந்தார்!

சென்னையை சேர்ந்த சசிகாந்த் செந்தில் (41) கடந்த 2009-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். நேர்மையாகவும் துணிச்சலாகவும் ‌பணியாற்றியதால் ம‌க்களின் நன்மதிப்பை பெற்றார்.இந்நிலையில் கடந்த 2019-ல் சசிகாந்த் செந்தில் தனது மாவட்டஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவர் காங்கிரஸில் இணைய முடிவெடுத்தார். முன்னதாக தக்ஷின கன்னட மாவட்ட துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அவர், மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு  ஆகியவற்றை எதிர்த்து நாட்டில் ஜனநாயகம் சிதைகிறது என்று கூறி செப்டம்பர் 6, 2019 அன்று தன் ஐ ஏ எஸ் பதவியை ராஜினாமா செய்த தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாஜக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்.

இதையடுத்து அவர் இன்று (திங்கள்கிழமை) சென்னை, சத்தியமூர்த்தி பவனில்தமிழக காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “சசிகாந்த் செந்தில் சிறந்த மாவட்ட ஆட்சியராக 10 ஆண்டுகள் கர்நாடகாவில் பணியாற்றியவர். நேர்மையான‌ பணிக்காக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தைரியமும், நேர்மையும் மிகுந்த அவரை காங்கிரஸுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  பாஜக  ஆட்சியில்  வகுப்புவாத பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதில் சசிகாந்த் செந்தில் தீவிரமாக இருக்கிறார்.எதிர்கால நாட்டின் நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக் காகவும் எத்தகைய வியூகங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் ஏற்கெனவே ராகுல் காந்தியுடன் ஆலோசித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகாந்த் செந்திலின் வருகை தமிழக‌ காங்கிரஸுக்கு உத்வேகம் அளிக்கும்” என்றார்.

திட்டமிட்டப்படி காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்த சசிகாந்த் செந்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதற்கான காரணத்தை செய்தியாளர்களிடம், “கடுமையான மன உளைச்சலிலும், நம் உடன் இருப்பவர்கள் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பதவி விலகினேன். நாம் வெறுப்பு இல்லாமல் வாழ்ந்தோம், இதே மாதிரியான சமூகத்தை அடுத்த தலைமுறைக்கும் வழங்க வேண்டும் என நினைக்கிறேன். வரும் காலத்தில் மக்களோடு மக்களாக இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்ற நான் துணையாக இருப்பேன். பாஜகவின் கொள்கை வெறுப்பை விதைக்கும் கொள்கை. அவர்கள் மக்களுக்கு எதிராக மக்களையே திசை திருப்புகிறார்கள். எந்த பொறுப்பையும் எதிர்பார்த்து கட்சியில் இணையவில்லை. பாஜகவை எதிர்கொள்ள சரியான கட்சி காங்கிரஸ்தான் என நம்புகிறேன் ‘ என்றார்.

மேலும், அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ் தனது நண்பர் என்றும், ஆனால் அவரது கொள்கை வேறு தனது கொள்கை வேறு என்றும் பதிலளித்த சசிகாந்த் செந்தில், அரசியலில் இறங்கினாலும் ‘பேண்ட் சர்ட்’ தான் அணிவேன் என்றும் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் ஏழு தமிழர்கள் விடுதலைப்பற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுபேரையும் பிரியங்கா, ராகுல்காந்தி ஆகிய ஏழு பேரும் மன்னித்து விட்ட நிலையில் அவர்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.