February 6, 2023

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டி!- முழு விபரம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்பமனு தாக்கல் செய்வதற்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தன்கர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கு பிறகு மார்கரெட் ஆல்வாவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக தென்னிந்தியாவை சேர்ந்த பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதால் துணை ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.

மார்கரெட் ஆல்வா, 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். கோவாவின் 17வது ஆளுநராகவும், குஜராத்தின் 23ஆவது ஆளுநராகவும், ராஜஸ்தானின் 20ஆவது ஆளுநராகவும், உத்தராகண்டின் 4ஆவது ஆளுநராகவும் இவர் பணியாற்றியிரு்ககிறார். அதற்கு முன்பாக, மத்திய அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா இருந்திருக்கிறார். ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக அறியப்பட்டார். அந்த கட்சியின் காரிய கமிட்டி இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இவரது குடும்பம் அரசியல் பின்புலத்தைக் கொண்டது. இவரது அவரது மாமியார் வயலட் ஆல்வா, 1960களில் மாநிலங்களவை தலைவராக இருந்தார். இவரது மாமனார் ஜோச்சிம் ஆல்வாவும் காங்கிரஸ் கட்சி எம்பி ஆக பணியாற்றியவர். இந்திய நாடாளுமன்றத்தில் கணவன், மனைவி ஒரே நேரத்தில் முதல் முறையாக எம்.பி ஆக இருந்தது இந்த தம்பதிதான்.

1974இல் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான அவர், அதன் பிறகு 1980, 1996, 1992 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1984-85வரை இவர் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சராகவும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராகவும் மார்கரெட் ஆல்வா பணியாற்றினார்.

1990இல் கர்நாடகா மாநிலத்தின் உத்தரா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார் மார்கரெட். அதன் பிறகு 2004இல் மீண்டும் அவர் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். இந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்தார். 2008இல் கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரை பண பலம் அடிப்படையில் தேர்வு செய்வதாக மார்கரெட் ஆல்வா குற்றம்சாட்டினார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்து வந்த பிறகு கட்சியில் வகித்து வந்த முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகினார்.


இந்த நிலையில், 2009இல் அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டு வந்த அவர் 2012இல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2014இல் அவர் குஜராத் மாநில ஆளுநராக ஒரு மாதமும் கோவா மாநில ஆளுநராக ஒரு மாதத்துக்கும் குறைவான வாரங்களுக்கும் பதவியில் இருந்தார்.

நாடாளுமன்றவாதியாக இந்திய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங்கின் மொரீஷியஸ் பயணம், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் சோவியத் யூனியன், நரசிம்ம ராவ் மற்றும் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோரது பதவிக்காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் மார்கரெட் ஆல்வா.

இவரது கணவர் நிரஞ்சன் ஆல்வா, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். 2018ஆம் ஆண்டில் நிரஞ்சன் ஆல்வா உடல் நலக்குறைவால் காலமானார். சமீபத்திய ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், பெங்களூருவில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.