எலெக்‌ஷன் கமிஷனுக்கு தனி பவர் இருப்பதை நிரூபித்த டி.என்.சேஷன் காலமானார்!

இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இன்று இரவு சென்னை யில் காலமானார். அவருக்கு வயது 87. 1990 முதல் 1996-வரையிலும் இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி வகித்தவர். இவருடைய காலக்கட்டத்தில் இந்தியாவில் முதல்முதலாக வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதிவரை பொறுப்பு வகித்தார். ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கமிஷனில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதற்காக அவரை பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் ‘பவர்’ என்ன எப்படி பட்டது என்று சாதாரண பொதுமக்களுக்கும் தெரியவந்தது. அந்த அளவுக்கு தேர்தல் ஆணைய நடவடிக்கையை வெளிப்படையாக்கினார்.

இவரது தந்தையின் பெயர் டி.எஸ். நாராயணய்யர். தாயார் சீதாலட்சுமி. சென்னை தாம்பரம் கிருத்தவக் கல்லூரியில் பி.எஸ்.சி.(ஹானர்ஸ்) அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (பொது நிர்வாகம்), ஐ.பி.எஸ் (1953),ஐ.ஏ.எஸ்.(1954) முடித்தார். தமிழகத்தில் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை கலெக்டர் , போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். இவருக்கு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.