July 30, 2021

சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மரணம்!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா (வயது 64) உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ​​இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் காலமானார். இவர் 1974 ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

ரஞ்சித் சின்ஹா .,சிபிஐ இயக்குநராக மட்டுமின்றி பல முக்கியமான பதவிகளை வகித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரித்துள்ளார். தொடக்கத்தில் இந்தோ-திபெத்தியன் படை, ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைவராகவும் ரஞ்சித் சின்ஹா பணியாற்றி, பாட்னாவில் சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் 2012-ம் ஆண்டு காங்கிரஸ் அரசில் சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார்.

2013-ம் ஆண்டு சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். கூண்டுக்குள் இருக்கும் கிளி, எஜமானார் பேச்சைக் கேட்பது போன்று சிபிஐ செயல்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட் விமர்சித்தது.

தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்த வழக்கில் சின்ஹா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் ரஞ்சித் சின்ஹா மீது 2017-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

சிபிஐ இயக்குநராக சின்ஹா இருந்தபோது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குடன் கடும் மோதலில் ஈடுபட்டார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முடிக்க மறுத்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.