ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினரை அழைத்து வந்து வசிக்க அனுமதி!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவது அபூர்வம். சுமார் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தாரில், மூன்று லட்சம் பேர் மட்டுமே கத்தார் நாட்டுக் குடிமக்கள் உள்ளனர். இந்நிலை யில் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து வசிக்க அனுமதிக்கலாம் என்று ஐக்கிய அரபு எமிரேட்டுகள் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

முன்னதாக, குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்து ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சேர்ந்து வசிக்கலாம். இந்த விதியை இப்பொழுது ஐக்கிய அரபு எமிரேட் அரசு மாற்ற முடிவு செய்துள்ளது.

தாங்கள் அழைத்துக் கொள்ள விரும்பும் குடும்பத்தினரின் செலவுகளுக்கு போதுமான அளவு சம்பந்தப்பட்ட தொழிலாளி சம்பாதித்தால் அவர் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்து அங்கேயே வசிக்கலாம் என்று அமைச்சரவை முடிவு செய்து இருக்கிறது

ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அமைச்சரவை மேலும் சில முக்கியமான முடிவுகளை இந்த கூட்டத்தில் எடுத்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவைகளை மதிப்பிடுவதற்கும் அவர்களது அடிப்படை தேவைகளுக்கு ஏற்ப வாழ்நிலைகளை உயர்த்துவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு நடத்த அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கல்வி, சுகாதாரம் ஆகியவை குறித்தும் தேவையான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளியின் குடும்பத்தினர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வந்து வசிக்கும் பொழுது அவர்களும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் வேலைவாய்ப்புக்களை தேடிக்கொள்ள வாய்ப்பளிப்பது என்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

குடும்பத்தினரை அழைத்து வருவதற்கு ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் எவ்வளவு ஊதியம் பெற வேண்டும் என்பது தொடர்பாக எந்த முடிவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.