October 16, 2021

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உணவு தொழிற்சாலைகள் !- மத்திய அரசு தகவல்

நாடெங்கும் உள்ள நகரங்கள் வளர்ச்சி அடைய வளர்ச்சி அடைய முன்னொரு காலத்தில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களெல்லாம் புதிய வீடுகளும் தொழிற்சாலைகளும் சாலைகளும் அமைக்க பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், விளைநிலங்கள் நகரங்களிலிருந்து வெகு தொலைவுக்குத் தள்ளப்படுகின்றன. பெரும்பாலும் நகரங்களில் கொஞ்சநஞ்ச உணவுப் பொருள்களே விளைகின்றன அல்லது எந்தவித விளைச்சலுமே இருப்பதில்லை. தீனியும் இறைச்சியும் வெகுதூரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளிலிருந்தே வருகிறது. பெரும்பாலான வளரும் நாடுகளில், உற்பத்திப் பொருள்களை பண்ணைகளிலிருந்து நகரங்களுக்குக் கொண்டுவர போதிய சாலை வசதிகள் இல்லை. இதனால் சரக்குகள் வந்து சேருவதற்கு நீண்ட காலம் எடுக்கிறது, இதற்கிடையே ஏராளமான உணவுப் பொருள்களும் கெட்டுப்போய் விடுகின்றன, கடைசியில் நுகர்வோர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் பரம ஏழைகளாக இருக்கிறார்கள்.

பசியோடிருக்கும் இத்தனை அநேக வாய்களுக்கு உணவூட்ட நகர்ப்புற பகுதிகளில் உணவு வழங்கீட்டை அதிகரிப்பது இமாலய சாதனையாக இருக்கிறது. இதற்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள், பேக்கிங் செய்வோர், சரக்குகளை ஏற்றிச் செல்வோர், வியாபாரிகள், உணவுப் பொருள்களை கையாளுவோர் ஆகியோருடைய ஒருங்கிணைந்த முயற்சி அவசியம், அதோடு ஆயிரக்கணக்கான வாகனங்களும் தேவைப்படுகின்றன. இந்நிலையில் “மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டில், உணவு தொழிற்சாலைகள் துவக்க ஊக்குவிக்கப்படும்,” என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.

கேரள மாநிலம், பாலக்காட்டில், கேரள தொழிற்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், 119 கோடி ரூபாய் செலவில், உணவு பூங்கா அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற, அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பேசும் போது, “மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உணவு தொழிற்சாலை அமைக்க, மத்திய அரசு, உடனே அனுமதி வழங்குவதுடன், வெளிப்படையான நிர்வாக வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். மாநிலங்களில், உணவு பூங்காக்கள் அமைக்க, மத்திய அரசு, தலா, 50 கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது. ஒரு உணவு பூங்கா மூலம், நேரடியாக, 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். மறைமுகமாக, 25 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைவர். இந்தியாவை உணவு தொழிற்சாலையாக மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது”என்று கூறினார்.கேரள தொழிற்துறை மேம்பாட்டு கழகமும் ஆலப்புழையில் ஒரு உணவுப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.